Tn Govt: நிலம், மனைகளுக்கு எவ்வித தாமதமும் இன்றி ஆவணம் பதிவு செய்ய உத்தரவு...!
நத்தம் மனைகளுக்கு, நிலங்களுக்கு ஆவணப் பதிவுகளுக்கு தாக்கல் செய்யப்படும் போது எவ்வித தாமதமும் இன்றி ஆவணம் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; கிராம நத்தத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் நத்தம் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு தனியாக அ-பதிவேட்டில் சர்வே எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சர்வே எண்களுக்கு என வழிகாட்டி பதிவேட்டிலும் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்ற தீர்ப்பாணையில் பல்வேறு வழக்குகள் ஆதாரமாக காட்டப்பட்டு கிராம நத்தத்தில் உள்ள மனைகள் நிலங்கள் அரசால் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையில் நத்தம் தனிநபர் பெயரில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலங்கள் இரயத்துவாரி மனையாக (சென்னை தவிர) மாற்றம் செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது. நத்தம் சர்வே எண்கள் வருவாய் துறையில் முன்பு நத்தம் இடங்களில் பட்டாதாரர் பெயருடன் இருந்த காலிநத்தம் மற்றும் காலிமனை என வகைப்படுத்தப்பட்ட இனங்கள், தற்போது இரயத்துவாரி மனை நிலங்களாக (சென்னை தவிர வகைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் நத்தம் சர்வே எண்களில் உட்பட்ட இனங்களுக்கு புதிய சர்வே எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றினை தமிழ் நிலம் மென்பொருளில் மேலேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு நத்தம் மனைகளுக்கு நிலங்களுக்கு புதிதாக உட்பிரிவு செய்து பழைய சர்வே எண்களுக்கு பதிலாக புதிதாக சர்வே எண் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய சர்வே எண்கள் வழிகாட்டி பதிவேட்டில் சேர்க்கப்படாததால் இவற்றிற்கு புதிதாக மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டிய நிலை எழுகிறது. மதிப்பு நிர்ணயம் செய்வதற்கு காலதாமதம் ஆவதால் இதனை தவிர்க்கும் பொருட்டு மாவட்டப்பதிவாளர்கள் வருவாய் துறையில் நத்தம் சர்வே எண்களின் விவரத்தைப்பெற்று அதனை வழிகாட்டி பதிவேட்டில் உட்புகுத்தி உரிய நடைமுறையை பின்பற்றி ஒரு மாதத்திற்குள் எவ்வித விடல்களுமின்றி அனைத்து நத்தம் சர்வே எண்களுக்கும் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
மேலும் நத்தம் சர்வே எண்களில் பெரும்பாலான மக்களுக்கு குறைந்த அளவுள்ள மனையோ நிலமோ இருக்கும் என்பதால் அதனை விற்கும் பொழுது அதற்கு மனைப்பிரிவு அங்கீகாரம் கோரப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நீண்ட காலமாக கிராம நகர மக்கள் நத்தம் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றனர். இவை அரசால் நத்தம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 16.03.2020ல் வீட்டு மனைகள் பதிவு செய்தல் தொடர்பாக விரிவான தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.