ஆபீஸ்ல உட்கார்ந்துக்கிட்டே வேலை செய்றீங்களா? உடல் எடை அதிகரிக்காமல் இருக்க இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..
இன்றைய உலகில் உடல் பருமன் பிரச்னையால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.நவீன கால உணவு முறை, சுற்றுச்சூழல், மரபியல் காரணங்கள் என இதற்கு காரணமாக இருக்கிறது. உட்கார்ந்த படியே கணினியில் பணியை செய்துவருகின்றோம். இதனால், உடலுக்கு வேலை என்பதே இல்லாமல் போய்விட்டது. இதுவே திடீர் எடை அதிகரிப்பிற்கு வழிவகுத்து கொடுத்துவிடுகிறது.
உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டாலே உடலை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். அதற்கு அன்றாடம் குறைந்தது ஒரு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், இன்றைய பரபரப்பான உலகத்தில் பலருக்கும் உடற்பயிற்சிக்கென்று நேரம் கிடைப்பதில்லை. எனவே, அலுவலகத்திற்குச் செல்லும்போதும் அலுவலகத்திலும் சிறு விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலமாக நீங்கள் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம், உடல் எடையும் குறையும்.
படிக்கட்டுகள் : பெரும்பாலான அலுவலகத்தில் லிப்ட் வசதி இருக்கும், அதனைப் பயன்படுத்துவதற்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள். படிக்கட்டுகளில் ஏறும்போது முதலில் சற்று சிரமமாக இருக்கும். ஆனால், தொடர்ந்து செய்யும்போது நீங்கள் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். எளிதாக நீங்கள் ஏறினால் உங்கள் உடல்நிலை சரியாக இருக்கிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி ; அலுவலகத்தில் உடற்பயிற்சி செய்ய முடியாது. ஆனால், ஒரு சாதாரண வாக்கிங் செல்லலாம். அலுவலகத்தின் உள்ளோ, வெளியிலோ நடந்து சென்றால் உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் புத்துணர்ச்சி தரும். நீங்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்தால் கண்டிப்பாக அவ்வப்போது எழுந்து சென்று நடக்க வேண்டும்.
காணொலி அழைப்புகள் மூலமாக கூட்டங்கள் இருந்தால், நடந்துகொண்டே பேசுங்கள். கண்டிப்பாக மணிக்கு ஒருமுறை எழுந்து ஓரிரு நிமிடங்கள் நடப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் உங்கள் வாகனங்களை உங்களின் இருப்பிடத்தில் இருந்து முடிந்தவரை தூரமாக நிறுத்துங்கள்.
போக்குவரத்து : அவ்வப்போது பொதுப் போக்குவரத்திலும் அலுவலகத்திற்கு வரலாம். ஏனெனில், வீட்டிற்கும் பேருந்து நிறுத்தத்திற்கும் இடையிலுள்ள தூரம், அதுபோல பேருந்து நிறுத்தத்திற்கும் அலுவலகத்திற்கும் இடையிலுள்ள தூரம் நீங்கள் நடக்க முடியும்.
துரித உணவுகளை உட்கொள்வது : வீட்டிலிருந்து மதிய உணவு கொண்டு வாங்க. ஏனென்றால், அலுவலக உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளை காட்டிலும் ஆரோக்கியமானதாகவும் செலவு குறைந்ததாகவும் இருக்கும். வீட்டிலிருந்து கொண்டு வர முடியாத நாட்களில் ஃபாஸ்ட்புட் இல்லாமல், இயற்கை முறையில் தயாரிக்கும் உணவகங்களை கண்டுபிடித்து அதில் உணவு அருந்துங்கள்.
உணவு இடைவேளையில் பயிற்சி : மதிய உணவு இடைவேளையில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை மேஜையில் அமர்ந்துக் கொண்டே செய்யக்கூடிய ஈசியான உடற்பயிற்சிகளை முயற்சி செய்யலாம். இது உணவுக்கு பின் ஏற்படும் சோர்வை போக்க உதவும்.
Read more ; 2026-ல் அதிமுக ஆட்சி… உட்பகை கொண்டவர்கள் இனி தேவையில்லை… தியாகம் செய்ய நான் இருக்கிறேன் -எடப்பாடி பழனிசாமி…