ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவரா நீங்கள்..? இதை செய்தாலே போதும் நோய்களை தவிர்க்கலாம்..!!
இன்றைய காலத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் சூழல் அதிகரித்துவிட்டது. இப்படி வேலை பார்ப்பதால் தான் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், இதன் பாதிப்புகளை குறைக்க ஒரு நாளைக்கு 22 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தாலே போதும் என சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. எந்தவித உடல் இயக்கமும் இன்றி நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளை குறைக்க, வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என இப்போது அனைவருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.
சோம்பேறித்தனத்திற்கும் இறப்பிற்கும் உள்ள தொடர்பை உடற்பயிற்சி எந்த விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ள, நாம் உடல் இயக்கமின்றி அமர்ந்திருக்கும் நேரத்தையும் உடற்பயிற்சி செய்யும் நேரத்தையும் ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். உடல் இயக்கம் அதிகரிப்பதால் இறப்பு விகிதம் குறைவதாக ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. தினமும் 10½ மணி நேரத்திற்கும் குறைவாக அமர்ந்திருப்பவர்கள், கூடுதலாக 10 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தாலே, அவர்களின் இறப்பு விகிதம் 15 சதவிகிதம் குறைவதாகவும், அதேசமயம் 10½ மணி நேரத்திற்கும் அதிகமாக அமர்ந்திருப்பவர்களின் இறப்பு விகித ஆபத்து 35 சதவிகிதம் குறைவதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் உடல் பருமன், இதய நோய்கள், டைப் 2 டயாபடீஸ், சில வகையான புற்றுநோய்கள் வர அதிக வாய்ப்புள்ளது. இதனால் மற்ற நபர்களை விட இவர்களின் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. நீங்கள் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் உங்களின் தசைகள் செயல்படாமல் இருக்கிறது. இதனால் மெடபாலிஸம், ரத்த ஓட்டம் குறைந்து உடலில் வீக்கம் அதிகரிக்கிறது. இதுவே நாம் சீரான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது தசைகள் வலுவாகி, ரத்த ஓட்டமும் மெடபாலிஸம் அதிகமாகிறது. இதன் காரணமாக உடல் வீக்கம் குறைகிறது. ஆகையால் நடைபயிற்சி மெது ஓட்டம், சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சிகளுக்காக தினமும் நேரத்தை ஒதுக்குங்கள்.
25 நிமிட உடற்பயிற்சியில் என்னவெல்லாம் செய்யலாம்..? 15 நிமிடங்கள் நடைபயிற்சி செய்தாலே இதய நோய்கள் வரும் ஆபத்தை கணிசமாக குறைக்கலாம். அதேபோல் குறைந்தபட்சம் வாரத்தில் இரண்டு நாட்களாவது உடலை வலுப்படுத்தும் பயிற்சியில் அனைவரும் ஈடுபடு வேண்டும். குறிப்பாக 30 வயதில் இருப்பவர்கள் இந்தப் பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும். ஏனென்றால், 30 வயதை அடைந்ததும் மனிதர்களின் உடலில் உள்ள லீன் தசைகள் 10 வருடங்களுக்கு 8 சதவிகிதம் என்ற விகிதங்களில் குறையத் தொடங்குகிறது. 60 வயதில் இது 15 சதவிகிதமாக அதிகரிக்கிறது. இதை தடுக்க வேண்டுமென்றால் உடலை வலுப்படுத்தும் பயிற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டியது அவசியம்.