உங்கள் இருசக்கர வாகனம் எப்போதும் புதுசு போல இருக்கணுமா..? இதை மட்டும் பண்ணுங்க..!!
இருசக்கர வாகனம் நம் அனைவரது வீட்டிலுமே தவறாமல் இருக்கும். சில வீடுகளில் ஆசைக்கு ஒரு விலை உயர்ந்த பைக், தினசரி தேவைக்கு சாதாரண பைக் என்றெல்லாம் வைத்திருப்பர். நம் தோழன் போலவே உடனிருக்கும் இரு சக்கர வாகனத்தை நாம் முறையாக பராமரிப்பு செய்தால் தான், நீண்ட காலத்திற்கு அது உழைக்கும். அத்துடன் இன்றைய பொழுதில் இரு சக்கர வாகனத்தில் நல்ல மைலேஜ் தேவை என்றாலும், பயணம் சுமூகமானதாக அமைய வேண்டும் என்றாலும் முறையான பராமரிப்பு அவசியம். அனைத்திற்கும் மேலாக வாகனம் மற்றும் ஓட்டுநரின் பாதுகாப்புக்கு பராமரிப்பு என்பதை முறையாக செய்ய வேண்டும். அந்த வகையில், என்னென்ன செய்யலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.
ஆயில் செக்கிங் :
உங்கள் வாகனத்தில் அத்தியாவசியத் தேவையாக உள்ள எஞ்சின் ஆயில், பிரேக் ஆயில் மற்றும் கூலண்ட் போன்ற திரவங்களின் அளவு சரியாக உள்ளதா? அது நல்ல தரத்தில் உள்ளதா? என்பதை அவ்வபோது ஆய்வு செய்ய வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் பழைய ஆயிலை மாற்றிவிட்டு புதிய ஆயில் செலுத்த வேண்டும். இதைச் செய்தால் தான் வாகனம் சுமூகமாக இயங்கும்.
காற்று அளவு :
பாதுகாப்பு மற்றும் சுமூகமான செயல்திறன் ஆகிய இரண்டுக்குமே டயர்களின் காற்று அளவு மிக முக்கியம். வாகன உற்பத்தியாளர் அல்லது மெக்கானிக் பரிந்துரை செய்யும் அளவில் எப்போதும் காற்று இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். காற்று குறைந்தால் மைலேஜ் குறையும் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பும் கேள்விக்குறியாகும்.
பேட்டரி பராமரிப்பு :
உங்கள் பேட்டரியில் அரிப்பு ஏற்பட்டுள்ளதா? லூஸ் கனெக்ஷன் உள்ளதா? மற்றும் வால்டேஜ் குறைந்துள்ளதா? என்ற ஆய்வை நீங்கள் செய்து கொள்ள வேண்டும்.
பிரேக் பரிசோதனை :
இருப்பதிலேயே மிக முக்கியமான பாதுகாப்பு அம்சம் இதுதான் என்று நீங்களும் அறிவீர்கள். ஆனால், அதில் அலட்சியம் காட்டுவதும் நிகழ்கிறது. எனவே பிரேக் பேட், டிஸ்க், பிரேக் ஆயில் போன்றவை குறித்து பரிசோதனை செய்ய வேண்டும். தேவையற்ற உராய்வு, இரைச்சல் போன்றவை ஏற்படுவது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
சுத்தம் :
நம் வாகனத்தில் தேவையின்றி படிகின்ற தூசு, துரு போன்றவற்றை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். மெல்லிய ஸ்பாஞ்ச் மற்றும் சோப்பு தூள் போன்றவற்றை வைத்து சுத்தம் செய்யலாம்.
சர்வீஸ் :
அடிப்படையான சில பராமரிப்புகளை நாமே செய்து கொள்ள முடியும் என்றாலும், கைதேர்ந்த மெக்கானிக் ஒருவரிடம் அவ்வபோது சர்வீஸ் செய்து கொள்வது நல்ல பலனை தரும். முக்கியமான பிரச்சனைகளை கண்டறிந்து தீர்வு காண முடியும்.