காலை எழுந்தவுடன் மொபைல் பார்க்கிறீர்களா?. நோட்டிபிகேஷனால் ஏற்படும் ஆபத்து!. நிபுணர்கள் எச்சரிக்கை!
Mobile: செல்போனுக்கு அடிமையான பலரும் தங்களுக்கே தெரியாமல் பலவித உடல்நல குறைபாடுகளையும், உளவியல் ரீதியான தாக்குதல்களையும் அனுபவித்து வருகின்றனர். இன்றைய நிலையில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். ஆரம்ப காலங்களில் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட செல்போன் தற்போது பொழுதுபோக்கு சாதனமாக மாறிவிட்டது. பலரும் செல்போனுக்கு அடிமையாகி எப்போதும் செல்போனிலேயே திளைத்து இருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தப் பழக்கம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இது NoMoPhobia அதாவது, மொபைல் ஃபோன் பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்ற நிலை ஆகும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மொபைலில் சமூக வலைதள நோட்டிபிகேஷனை பார்த்து அன்றைய நாளைத் தொடங்குவது அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுத்து விடும். இந்த மன அழுத்தம் கார்டிசோல் அளவுகள் மற்றும் அதிக இதயத் துடிப்பு, மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிவரும் ப்ளூ லைட், தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் ஹார்மோனின் உடலின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுத்தும். எழுந்ததும் நீல ஒளியில் கண்களை செலுத்துவதால் சர்க்காடியன் ரிதத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி நாள் முழுவதும் சோர்வுக்கு வழிவகுத்து அடுத்த இரவில் தூங்குவதை கடினமாக்கி விடுகிறது.
காலையில் எழுந்தவுடன் மொபைலை பார்ப்பதால் தியானம், உடற்பயிற்சி என பலவகையான ஆரோக்கியமான காலை வேலைகளை மறக்கடிக்க செய்து அர்த்தமுள்ள செயல்களில் இருந்து உங்களைத் திசை திருப்பும். இப்பழக்கத்தால் கல்வி மற்றும் தொழில்முறைகளில் கவனச் சிதறல்கள் ஏற்படலாம்.