சர்வதேச ஆண்கள் தினம் எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா.? அதன் வரலாறு மற்றும் பின்னணி ஒரு பார்வை.!
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தங்களைப் பற்றி என்றுமே கவலைப்படாமல் தங்கள் குடும்பத்திற்காகவும் உறவுகளுக்காகவும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணிக்கும் ஆண்களை கவுரவிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்களுக்கான ஆரோக்கியமான வாழ்வை பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துவதற்கும் அவர்கள் இந்த சமுதாயத்திற்காக வழங்கிய பங்களிப்புகளை நினைவுபடுத்தும் விதமாகவும் இந்த சர்வதேச ஆண்கள் தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சர்வதேச ஆண்கள் தினம் எப்போது முதன்முதலாக கொண்டாடப்பட்டது இதன் வரலாற்று பின்னணி என்ன என்று பார்ப்போம்.
சர்வதேச ஆண்கள் தினம் 1999 ஆம் ஆண்டு முதல் தான் கொண்டாடப்பட்டு வருகிறது. 1999 ஆம் வருடம் நவம்பர் 19ஆம் தேதி தான் முதல் ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டது. 1990களில் அமெரிக்காவின் மிசோரி ஆண்கள் ஆய்வு மையத்தைச் சேர்ந்த தாமஸ் ஓஸ்டர் என்பவர் ஆண்களைப் பற்றி ஆய்வு செய்ய பல்வேறு குழுக்களை அமெரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் மால்டாவில் நியமித்திருந்தார். அந்த ஆய்வின்போது தான் தெரிந்தது ஆண்களை சிறப்பிக்கும் வகையில் நாட்கள் எதுவும் இல்லை என்று. இதனைத் தொடர்ந்து தான் ஆண்களை கவுரவிக்கும் வகையில் 1999 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி முதல் சர்வதேச ஆண்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ஆண்கள் தினத்தின்போது ஆண்களின் இலக்காக சில இலக்குகள் நியமிக்கப்படும். அதன்படி இந்த வருட ஆண்கள் தின இலக்காக 0 ஆண்கள் தற்கொலை என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி சர்வதேச ஆண்கள் தினத்தில் தற்கொலை செய்து கொள்ள மாட்டோம் என்பதை உறுதி மொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தற்கொலை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். இதுபோல ஆண்கள் மற்றும் சிறுவர்களின் மனநலம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.