இந்து மத சடங்குகளில் எலுமிச்சை பழம் அதிகம் பயன்படுத்துவதற்கான காரணம் என்ன தெரியுமா.?
இந்து மத சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படும் பழமாக இருப்பது எலுமிச்சை ஆகும். சாமிக்கு மாலை அணிவிப்பதாக இருந்தாலும் அதில் எலுமிச்சை இருக்கும். மேலும் புது வீடு கிரகப்பிரவேசம் செய்வதென்றாலும் வாசலில் எலுமிச்சம் பழத்தை கட்டி தொங்க விட்டிருப்பார்கள். புதிதாக வாகனம் வாங்கினாலும் அதன் சக்கரத்தில் எலுமிச்சை பழத்தை வைத்து ஏற்றி இறக்குவது மரபாக இருக்கிறது. இப்படி கடவுளுக்கு பூஜை செய்வது முதல் நமது ஒவ்வொரு காரியங்களிலும் எலுமிச்சை ஏன் முக்கிய இடம் வகிக்கிறது என்பதை பார்ப்போம்.
சமஸ்கிருத மொழியில் எலுமிச்சை, நிம்பு பலா என அழைக்கப்படுகிறது. இந்த சிறிய வகை சிட்ரஸ் பழத்தில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இருப்பதோடு ஆயுர்வேத மருத்துவம் வீட்டு வைத்தியம் நோய் எதிர்ப்பு சக்தி என பல விஷயங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. மேலும் இதிகாசங்கள் மற்றும் புராணங்களின்படி எலுமிச்சை பழத்தில் பல அரிய சக்திகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்தப் பழத்திற்கு வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை விரட்டும் ஆற்றல் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
எலுமிச்சை பழத்திற்கு என இந்து மதத்தின் புராணங்களில் கதைகள் இருக்கிறது. அதன்படி நிம்பா சூரன் என்ற அசுரன் பஞ்சத்தை ஏற்படுத்தி மக்களை கொடுமைப்படுத்தி வந்ததாகவும் அவனை அழிப்பதற்காக அகஸ்திய முனிவர் சக்திதேவியிடம் வேண்டியதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. சக்தி தேவி நிம்பா சூரனை அழிப்பதற்கு முன்பே அவன் தேவியின் பாதங்களில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் இதனால் நீ இனி நிம்பு பலாவாக கோயில்களில் வைத்து பூஜிக்கப்படுவாய் என தேவிய உனக்கு வரம் கொடுத்ததாகவும் இதிகாசங்கள் தெரிவிக்கின்றன.
இதன் பிறகு சக்தி தேவிக்கு எலுமிச்சை மாலை செய்து பூஜை செய்து வருவதாகவும் புராணங்களில் இடம் பெற்று இருக்கிறது. தேவி அசுரனுக்கு கொடுத்த வரத்தின் காரணமாகவும் இந்து மத வழிபாடுகளில் எலுமிச்சை பழம் அதிகம் இடம் பெறுவதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. எலுமிச்சை பழத்திற்கு எதிர்மறை ஆற்றல்களை உள்வாங்கிக் கொண்டு அதை வீடுகள் மற்றும் கோவில்களுக்குள் அண்ட விடாமல் இருக்க சக்தி இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே எலுமிச்சை இந்து மத வழிபாடுகளில் அதிகமாக இடம்பெற்று இருக்கிறது.