தீபாவளிக்கு பட்டாசுகளே வெடிக்காத தமிழக கிராமங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? என்ன காரணம்..?
தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான். தீபாவளிப் பண்டிகைக்கு எண்ணெய் குளியல், புத்தாடை, பலகாரம் ஆகிய சிறப்புகள் இருந்தாலும், பட்டாசுதான் பட்டென்று தோன்றும். சிதறும் சங்கு சக்கரங்களும், மின்னி மறையும் மத்தாப்புகளும், ஒலியெழுப்பிச் செல்லும் வெடிகளும் வெடித்தால்தான் தீபாவளி என்று நினைப்பவர்கள் பலர். ஆனால், பட்டாசுகள் இல்லாமலே சில கிராமங்கள் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றன. அதுபற்றி உங்களுக்கு தெரியுமா..?
கூந்தன்குளம்
அவற்றில் முக்கியமான கிராமம் தான் கூந்தன்குளம். நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் உள்ள சிறு கிராமம் கூந்தன்குளம். இந்த ஊருக்கு ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. குறிப்பாக சைபீரியா, மத்திய ஆசியா, வட இந்தியப் பகுதிகளில் இருந்து கூந்தன்குளம் வரும் பறவைகள், அங்கேயே முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் நவம்பர் மாதத்தில் வந்து, ஜூன் மாதத்தில் சொந்த இடம் திரும்புகின்றன. இதனாலேயே கூந்தன்குளம் கிராமத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டு, 43 வகைக்கும் மேலான நீர்ப்பறவை இனங்கள் பராமரிக்கப்படுகின்றன.
கூந்தன்குள கிராம நிர்வாகத்தினரே பறவைகள் சரணாலயத்தைப் பராமரித்து மேற்பார்வை செய்கின்றனர். பறவைகளை அச்சுறுத்தாமல் இருக்க ஒட்டுமொத்த கிராமமும் பட்டாசுகளைத் தவிர்க்கிறது. 25 ஆண்டுகளாக பட்டாசுகளின் வாடையே இல்லாமல் அங்குள்ள குழந்தைகள் வளர்கின்றனர். அதேபோல பண்டிகைகளின் போது ஒலிப்பெருக்கிகளையும் அவர்கள் பயன்படுத்துவதில்லை.
வெள்ளோடு கிராமங்கள்
ஈரோடு மாவட்டம் அருகே வெள்ளோடு கிராம மக்கள் பட்டாசுகளே இல்லாமல் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். அங்குள்ள பறவைகள் சரணாலயத்துக்கு இடையூறு தரக்கூடாது என்பது அக்கிராம மக்களின் எழுதப்படாத விதி. 19 ஆண்டுகளாக அங்கு பட்டாசுச் சத்தம் கேட்பதில்லை. அத்துடன் வெள்ளோட்டைச் சுற்றியுள்ள 6 கிராமங்களும் பட்டாசு வெடிப்பதில்லை.
வெளவால்தோப்பு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வெளவால்தோப்பு கிராமத்திலும் பட்டாசு வெடிப்பதில்லை. அங்குள்ள ஆலமரத்தில் நூற்றுக்கணக்கான வெளவால்கள் தொடர்ந்து 75 ஆண்டுகளாகத் தங்கி வருகின்றன. இதனாலேயே அந்தக் கிராமத்துக்கு வெளவால்தோப்பு என்று பெயர் சூட்டப்பட்டது. அங்குள்ள மக்களில் சிலர் வெளவால்களைத் தெய்வமாகவும் வழிபடுகின்றனர். வெளவால்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க அக்கிராம மக்கள் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கின்றனர்.