தினமும் உலர் பழங்களை சாப்பிடுகிறீர்களா..? நம் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்..? கவனிக்க வேண்டியவை..!!
உலர் பழங்களில் பலவித ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளது. நம் உடலுக்கு தேவையான வைட்டமின், மினரல்கள், நார்ச்சத்து என ஒருவரின் உடல்நலத்தை மேம்படுத்தும் அனைத்து சத்துகளும் உள்ளன. அதனால்தான் பலரும் தங்களது டயட்டில் உலர் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர். இவை நம் உடலுக்கு தேவையான சக்தியை தருவதோடு செரிமானத்திற்கும் உதவுகிறது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த உலர் பழங்களை தினமும் சாப்பிடலாமா? அப்படியே தினமும் சாப்பிட்டால், நம் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உலர் திராட்சை, ஆப்ரிகாட் போன்றவற்றில் நிறைய பொட்டாசியமும் நார்ச்சத்தும் உள்ளது. இவை நம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும், இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உலர் பழங்களை அளவாக சாப்பிட்டால் உடல் எடை குறைய உதவியாக இருக்கும். மேலும், இதை சாப்பிடும் போது சீக்கிரமாகவே நம் வயிறு நிறைவதோடு ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸை சாப்பிடுகிறோம் என்ற எண்ணமே ஏற்படாது. இதில் இரும்புசத்தும் காப்பரும் இருப்பதால், உங்களுக்கு விரைவான ஆற்றலை தருவதோடு மூளையையும் வேகமாக செயல்பட வைக்கிறது.
அதேசமயத்தில் சர்க்கரை அல்லது உப்பு சேர்க்கப்பட்ட உலர் பழங்களில் அதிகமான கலோரிகள் இருக்கும். இதை சாப்பிடுவதால் உங்கள் உடல் எடை அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவது போல, எவ்வளவுதான் உலர் பழங்களில் சத்துக்கள் நிறைந்திருந்தாலும் அதை அளவாக சாப்பிட வேண்டும். இயற்கையாகவே உலர் பழங்களில் நிறைய சர்க்கரை இருக்கும். ஆகையால், இதை அதிகமாக சாப்பிடும் போது உங்கள் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பலவிதமான உலர் பழங்களை சாப்பிடும் போது உங்கள் உடலுக்கு பல வகையான ஊட்டச்சத்துக்களும் ஆண்டி ஆக்சிடெண்டுகளும் கிடைக்கின்றன. டயட் கட்டுப்பாடு அல்லது அலர்ஜி இருப்பவர்கள் உலர் பழங்களை தவிர்க்கலாம். உலர் பழங்களை சாப்பிடுவதால் உங்கள் உடல் வித்தியாசமாக ரியாக்ட் செய்கிறதா என்பதை கவனமாக பாருங்கள். அடிக்கடி உலர் பழங்கள் சாப்பிடும் சில நபர்களுக்கு செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும்.
செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதவை :
* தினமும் கால் கப் உலர் பழங்கள் சாப்பிட்டாலே போதுமானது.
* உங்களுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டுமென்றால் டயட்டில் உலர் பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
* சர்க்கரை சேர்க்கப்படாத உலர் பழங்களை சாப்பிடுங்கள்.
* உலர் பழங்கள் சாப்பிட்டதும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, அதிகமாக தண்ணீர் குடியுங்கள்.
* உலர் பழங்கள் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்க அதில் சல்ஃபர் டை ஆக்ஸைட் சேர்த்திருக்கலாம். ஆகவே, கடைகளில் வாங்கும் போது லேபிளை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இவை சேர்க்கப்பட்டிருந்தால் ஒருபோதும் வாங்காதீர்கள்.