அன்னை சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது...! அண்ணாமலையை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு...!
தருமபுரியில் புனித லூர்து அன்னை ஆலயத்தில் உள்ள லூர்து அன்னை சிலைக்கு மாலை அணிவிக்க அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்கின்ற பெயரில் தமிழக முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று பாஜக அரசு செய்த சாதனைகளையும் விளக்கி வருகிறார். அதன்படி நேற்று தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இரு இடங்களில் பிரச்சாரம் செய்ய சென்றார். வழியில் புகழ்பெற்ற பி.பள்ளிப் பட்டியில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் உள்ள லூர்து அன்னை சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக மாலை 5.50 மணிக்கு வருகை தந்த அவர், ஆலயத்தின் வழியாக அன்னை மாதாவின் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என இடைமறித்து தடுத்து நிறுத்தினர்.
சர்ச் உள்ளே வர அனைவருக்கும் உரிமை உள்ளது. இன்னும் 10,000 பேரை கொண்டு வந்து தா்ணா நடத்தினால் நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்றார். இருதரப்பு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கு இருந்த இளைஞர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் லூர்து அன்னை சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்தார். அண்ணாமலை மாலை அணிவிக்க கூடாது என்று தடுத்து நிறுத்தியதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.