நீச்சல் குளத்தில் குளிக்காதீர்கள்!… மூக்கில் நுழைந்து மூளையை தின்னும் அமீபா!… 10 வயது சிறுமி பலியான அதிர்ச்சி!
கொலம்பியாவில் மூக்கு வழியாக நுழைந்து மூளையை உண்ணும் அமீபா என்ற விநோத நோய்க்கு 10 வயது சிறுமி பலி ஆகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியாவைச் சேர்ந்தவர் டாடியானா கோன்சாலஸ். இவரது 10 வயது மகள் ஸ்டெபானியா வில்லமிசார். இவர் குடும்பத்தினருடன் விடுமுறைக்குச் சென்றபோது, நீச்சல் குளம் ஒன்றில் குளித்துள்ளார். இந்த நிலையில், அடுத்த சில நாட்களில் அவருக்கு காதுவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இது சில நாட்களில் சரியாகிவிடவே, சாதாரண அலர்ஜியாக இருக்கும் என்று அவர்கள் நினைத்துள்ளனர். இருப்பினும், இரண்டு வாரங்களில் அவரது உடல்நிலை மோசமானதாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் அவர் படுக்கையில் இருந்தே எழுந்திருக்க முடியாத சூழல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனையில் அட்மிட் ஆன மறுவாரமே தீவிர சிகிச்சை பெற்றுவந்த, அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அந்தச் சிறுமியின் மரணம் குறித்து மருத்துவர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். அதில்தான் அந்தச் சிறுமிக்கு அமீபிக் என்செபாலிடிஸ் என்ற பாதிப்பு இருந்ததை உறுதி செய்துள்ளனர். இந்த பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழக்க 97% வாய்ப்பு இருக்கிறது. இது, பொதுவாக ’மூளையை உண்ணும் அமீபா’ என்று குறிப்பிடப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தயார் டாடியானா கோன்சாலஸ், "அவருக்கு இதுபோன்ற ஒரு பாதிப்பு ஏற்பட்டதை எங்களால் நம்பவே முடியவில்லை. நீச்சல் குளத்தில் குளிக்கும்போது, அந்த அமீபா மூக்கின் வழியாக உடலில் நுழைந்துள்ளது. அவருக்கு பல்வேறு வழிகளில் சிகிச்சை அளிக்க முயன்றோம். இருப்பினும், எதற்கும் பலன் இல்லை" என்றார்.
இந்த அமீபா தொற்றால் மூளை காய்ச்சல் ஏற்பட்டு இறப்பவர்களின் விகிதம் 97 சதவிகிதமாக உள்ளது. அமெரிக்காவில் இதுவரை இந்நோயால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்ததாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், விர்ஜினியாவில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு ஒன்றில், மூளைக் காய்ச்சலால் இறந்த 16 ஆயிரம் பேரின் உடல்களை உடற்கூறாய்வு செய்ததில், 5 பேர் நெக்லேரியா பவுலேரி அமீபாவால் உண்டாகும் மூளைக் காய்ச்சலினால் இறந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. ஆனால் உடற்கூறாய்வு அறிக்கை வரும்வரை, இவர்கள் எதனால் இறந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இந்தியாவில்கூட இந்நோயினால் 12 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.