"எண்ணி 28 அமாவாசை தான் திமுக ஆட்டம் க்ளோஸ்."! முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.!
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி குறித்தும் திமுக நிர்வாகிகள் குறித்தும் பரபரப்பான குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது மன்னராட்சி நடக்கிறதா அல்லது மக்களாட்சி நடக்கிறதா என்று எண்ண முடியாத அளவிற்கு ஆட்சியில் இருக்கும் திமுக அரசு பல அராஜகங்களை கட்டவிழ்த்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்.
தாங்கள்தான் தமிழகத்தை நிரந்தரமாக ஆளப்போகும் கட்சி என்று நினைப்பில் திமுக செயல்பட்டு வருவதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதிமுக கட்சியின் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சரான திரு செல்வகுமார் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் மருத்துவம் படிக்க வைப்பதாக கூறி அழைத்து வரப்பட்ட தலித் சிறுமி திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளால் கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
காவல்துறை நீதியின் பக்கம் நின்று நடவடிக்கை எடுக்காமல் ஆளும் வர்க்கத்திற்கு அடிவருடியாக செயல்படுவதாகவும் கடுமையாகச் சாடி உள்ளார். இது போன்ற அதிகார வரம்பு மீறல்கள் எல்லாம் சில காலம் தான். இன்னும் 28 அமாவாசை தான் திமுக அரசின் ஆட்டம் முடிவுக்கு வரும். அன்று அநீதிகளுக்கு எல்லாம் அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் பெண்களை தொந்தரவு செய்வதும் அரசு இயந்திரங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதும் திமுக உறுப்பினர்களுக்கு கைவந்த கலை எனவும் குற்றம் சாட்டியிருக்கிறார். எல்லா ஆட்டங்களும் முடியும் காலம் வெகு தூரத்தில் இல்லை எனவும் அவர் எச்சரித்துள்ளார்.