”அந்த சாரை காப்பாற்ற திமுக அமைச்சர்கள் முயற்சி”..!! ”நீதி கிடைக்கும் வரை போராட்டம் நிற்காது”..!! எடப்பாடி பழனிசாமி அதிரடி..!!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது ஞானசேகரன் தன்னுடைய போனில் சார் என்று யாரோடு பேசிக்கொண்டு இருந்ததாக மாணவி அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி யார் அந்த சார் அவரும் திமுகவுக்கு வேண்டியவரா? என தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக் கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அந்த சார் யார் என்று நாங்கள் புகார் அளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மாணவி தான் தனது புகாரில் கூறியுள்ளார். எனவே, அது குறித்து விரிவான விசாரணை நடந்த பிறகு தானே விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணை நடத்தாமல் ஒருவர் தான் குற்றவாளி என்று சொல்வது சந்தேகத்தை எழுப்புகிறது.
எனவே, உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இந்த சம்பவத்தில், திமுகவை சேர்ந்தவர் சம்பந்தப்பட்டு இருப்பதால் தான் சார் என்று யாரும் இல்லை எனக்கூறி அந்த நபரை காப்பாற்ற திமுக அமைச்சர்கள் குரல் கொடுக்கின்றனர். குறிப்பாக, உயர்கல்வித்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், மகளிர் துறை அமைச்சர் ஆகியோர் சார் என்று யாரும் இல்லை என கூறி வருகின்றனர்.
இவ்வளவு பேரும் பேசுகிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்..? யாரோ ஒருவர் இவர்களுக்கு வேண்டியபட்டவர்கள் இருக்கிறார்கள். எங்களை பொறுத்தவரையில் இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று பாதிக்கப்பட்ட மாணவிக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும். அந்த சார் என்றால் யார் என்பதை விசாரணை செய்து அவரையும் கைது செய்ய வேண்டும். அதனால் தான் போராட்டம் நடக்கிறது. இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை போராட்டம் நிற்காது” என தெரிவித்தார்.