ரூ.411 கோடி ஊழல் செய்த திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன்..? அரசு நிலத்தை அபகரித்ததாக அறப்போர் இயக்கம் பரபரப்பு புகார்..!!
அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆக்கிரமித்துள்ள அரசு நிலம் மீட்கப்பட வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அமைச்சர் ராஜ கண்ணப்பன் தன்னுடைய மகன்கள் மூலமாக ரூபாய் 411 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளார். இதற்கான ஆதாரங்களை அறப்போர் இயக்கம் இன்றைய தினம் புகாராக லஞ்ச ஒழிப்பு துறை, முதலமைச்சர், துணை முதலமைச்சர், தலைமைச் செயலர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ளோம்.
இந்த அரசு நிலம் உடனடியாக மீட்கப்பட்டு அமைச்சர் ராஜ கண்ணப்பன் உட்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர்களாக இருப்பவர்கள் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன்கள் பிரபு, திவாகர் மற்றும் திலீப் குமார். நிலங்களை அபகரிப்பதற்காக இந்த நிறுவனம் 1991 முதல் 2018 வரை பல பத்திரபதிவுகளை செய்துள்ளது.
அரசு வழிகாட்டி மதிப்பு படி பார்த்தால் இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு 1 சதுரடிக்கு ரூ.11,000 ஆகும். எனவே, 205618 சதுரடி நிலத்தின் மதிப்பு ரூ.226 கோடி ஆகும். இந்த இடத்தில் சந்தை மதிப்பு குறைந்த பட்சம் 1 சதுரடிக்கு ரூ.20,000 ஆகும். அதன்படி பார்த்தால், இன்றைய மதிப்பு ரூ.411 கோடி ஆகும். அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அழுத்தத்தினால் வருவாய்த்துறை இந்த நிலத்தை மீட்காமல் உள்ளது என்று அறிகிறோம்.
அமைச்சர் ராஜ கண்ணப்பன் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சொத்துக்களை சேர்த்து உள்ளார். இந்த நிலத்தை உடனடியாக அரசு மீட்க வேண்டும். அரசு நிலத்தை பத்திரப்பதிவு செய்வது சட்டவிரோதமாக இருந்தாலும் அதை தொடர்ந்து இந்த நிறுவனம் செய்து வந்துள்ளது. எனவே, அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவரது மகன்கள் மற்றும் இதை மீட்டெடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த அதிகாரிகள் மீது உடனடியாக FIR பதிவு செய்து விசாரிக்கும் படி அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.