கள்ளச்சாராயம் தயாரித்த கட்சியினரை பாதுகாக்க திமுக அரசு முயற்சி...! அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு...!
தங்கள் தவறுகளை மறைக்கவும், கள்ளச்சாராயத் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் திமுகவினரைப் பாதுகாக்கவும், திமுக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தால் 69 உயிர்கள் பலியான வழக்கு விசாரணையில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளது. கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில், பல ஆண்டுகளாக நடந்து வரும் கள்ளச்சாராயம் தயாரிப்பு மற்றும் விற்பனையைத் தடுக்க தமிழக அரசு தவறியிருப்பதையும், மதுவிலக்குத்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், மதுவிலக்குத் துறை அதிகாரிகள் பதிவு செய்யும் வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஜோடிக்கப்பட்டவை என்றும், முதன்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் சுதந்திரமாகச் செயல்படுகிறார்கள் என்றும் கூறியிருக்கின்றனர். அத்துடன், மதுவிலக்குத் துறை அதிகாரிகள் பல தவறுகளைச் செய்வதாகவும், அவ்வாறு தவறிழைக்கும் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.
கள்ளச்சாராயம், போதைப்பொருள்கள் புழக்கம், தமிழகம் முழுவதுமே பெருகியிருப்பதை, பாஜக தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. ஆனால், திமுக அரசு, தமிழகத்தில் கள்ளச்சாராயம் இல்லை என்றே கூறிவந்தது. கள்ளக்குறிச்சி வழக்கில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ள தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படவில்லை என்றும், மாதவரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். மாதவரம் என்ன ஆந்திராவிலா இருக்கிறது?
தங்கள் தவறுகளை மறைக்கவும், கள்ளச்சாராயத் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் திமுகவினரைப் பாதுகாக்கவும், திமுக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 69 உயிர்கள் பலியான பிறகும், தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ளவில்லை. உண்மையில் மக்கள் நலனுக்காக நடக்கும் ஆட்சி என்றால், இன்று சென்னை உயர்நீதிமன்றம் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு, திமுக அரசு தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.