ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணிக்கும் திமுக...? உறுதி செய்த MP டி.ஆர்.பாலு...!
ஆன்மிகத் திருவிழாவை பாஜகவின் அரசியல் திருவிழாவாக மாற்ற நினைப்பதை அறிவார்ந்த இந்திய மக்கள் புறந்தள்ளுவார்கள் என திமுக எம்பி டிஆர்.பாலு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே என்ற கூச்சமும் அந்தக் கட்சிக்கு இல்லை. இதை மறைப்பதற்கும் மக்கள் கவனத்தைத் திசை திருப்பவும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதைத் தனது சாதனையாகக் காட்டி, தங்களது தோல்வியை மொத்தமாக மறைக்க நினைக்கிறார்கள். 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் பாஜக தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கியது. அதில் எந்த வாக்குறுதியை இந்தப் பத்தாண்டு காலத்தில் நிறைவேற்றி இருக்கிறார்கள்..?
உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம், ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவோம், நாடு முழுவதும் இருக்கும் நதிகளை இணைப்போம், 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைத்துக் குடும்பத்துக்கும் சொந்த வீடு கட்டித் தருவோம், இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும், வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணத்தை முழுமையாக மீட்போம், மீட்கப்பட்ட கருப்புப் பணத்தை இந்திய மக்கள் அனைவருக்கும் 15 லட்சமாகத் தருவோம் என்றெல்லாம் நீட்டி முழக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
இறை நம்பிக்கை ஒருவரது ஆன்மத் தேடல்; தனிப்பட்ட உரிமை. அரசியல் அணி திரட்டவும், வாக்கு வங்கிக்காகவும் பக்தியை மூலதனமாக வைத்து, மக்களின் நம்பிக்கையில் அரசியல் செய்வது இந்தியாவின் ஆன்மாவுக்கு எதிரானது; அரசியல் சாசன அறத்துக்கு மாறானது; நாட்டின் எதிர்காலத்துக்கும் நல்லது அல்ல. இறை நம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதரின் விருப்பமும் உரிமையும் ஆகும்.
ஒருவரது பக்தியை அரசியலுக்கான முதலீடாக மாற்றுவது ஜனநாயகத்துக்கு எதிரானது மட்டுமல்ல, ஆன்மிக அறங்களுக்கே எதிரானது ஆகும். கோயில் கட்டுவதையும், திறப்பதையும் தனது கட்சியின் சாதனையாகக் காட்டி மக்களை ஏமாற்ற மத்திய பாஜக அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் நினைப்பது ஏற்கத்தக்கது அல்ல. ஆன்மிகத் திருவிழாவை பாஜக-வின் அரசியல் திருவிழாவாக மாற்ற நினைப்பதை அறிவார்ந்த இந்திய மக்கள் புறந்தள்ளுவார்கள் என தெரிவித்துள்ளார். டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை மூலம் திமுக வராமல் கோவில் விழாவில் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.