நெருங்கும் தீபாவளி..!! சொந்த ஊருக்கு அரசுப் பேருந்தில் செல்லப் போறீங்களா..? அப்படினா இதை படிங்க..!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல, அரசு பேருந்துகளில் இதுவரை 70,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பொதுவாக வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், போதுமான அளவுக்கு போக்குவரத்து வசதிகள் இல்லாமல் போய்விடும். எனவேதான், இதுபோன்ற நாட்களில் சிறப்பு பேருந்துகளை, போக்குவரத்து துறை ஏற்பாடு செய்து வருகிறது.
அந்தவகையில், தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால், கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயங்க கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,675 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து, மொத்தமாக 10,975 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதேபோல, பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 5,920 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. ஆக மொத்தம் 16,895 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து, சொந்த ஊர்களிலிருந்து மீண்டும் ஊர் திரும்பும் பயணிகளுக்கு, 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2,100 பஸ்களுடன் 3,167 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 9,467 பஸ்களை இயக்கவும் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
இதேபோல் பிற ஊர்களுக்கு 3,825 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 13,292 பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள், டிக்கெட்களை முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று காலை வரையில், 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. சென்னையில் இருந்து மட்டும், சொந்த ஊர் செல்வதற்கு 46,000 பயணிகள் இதுவரை ரிசர்வ் செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு கிட்டத்தட்ட 6 லட்சம் பேர், அரசு போக்குவரத்துக் கழகத்தில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ரயில்களில் ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்பனை முடிவடைந்துவிட்டதால், அரசு பேருந்துகளையே பொதுமக்கள் நம்பியிருக்கின்றனர்.