தீபாவளி பலகாரம் அதிகமா சாப்டிங்களா? கொலஸ்ட்ரால் அதிகரிக்காம இருக்க இந்த டிப்ஸ் ஃபாலோவ் பண்ணுங்க..
பண்டிகை என்றாலே விதவிதமான உணவு மற்றும் பலகாரங்கள் கட்டாயமாக இருக்கும். வருடத்தின் எல்லா நாட்களிலும் டயட் கண்ட்ரோலை கொண்டிருந்தாலும் பண்டிகை காலத்தில் நம்முடைய நாவை நிச்சயமாக கட்டுப்படுத்த முடியாது. அந்த சமயத்தில் நமது வழக்கமான உணவு மற்றும் வாழ்க்கை முறை ரொட்டீனுக்கு பிரேக் கொடுத்து விடுவோம். இந்த மாதிரியான பிரேக் எடுத்து வாழ்க்கையை கொண்டாடுவது அவசியம் தான் என்றாலும், அதே நேரத்தில் உங்களுடைய ஆரோக்கியத்திலும் சமமாக கவனம் செலுத்த வேண்டும்.
தீபாவளி பலகாரங்கள் அனைவரும் எண்ணெயில் பொரித்து செய்யப்படுவதால், இந்த பண்டிகையால் கொலஸ்ட்ரால் அதிகரிக்க நிறைய வாய்ப்புள்ளது. அதுவும் ஏற்கனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், அவர்கள் இப்பண்டிகையின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க எந்த மாதிரியான விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதைக் காண்போம்.
அளவாக சாப்பிடவும் : தீபாவளி பண்டிகையின் போது வீட்டில் எண்ணெயில் சுட்ட பலகாரங்கள் அதிகம் இருக்கும். அதை பார்க்கும் போது அனைவருக்குமே ஆசை தீர சாப்பிட வேண்டுமென்று தோன்றும். ஆனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் எதையும் அளவாக சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதன் மூலம், கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
வறுத்த உணவுகளை அளவாக சாப்பிடவும் : முறுக்கு, குலாப் ஜாமூன், அதிரசம் போன்றவற்றை முடிந்தவரை குறைவாக சாப்பிடுங்கள். இவை அனைத்தும் எண்ணெயில் பொரிக்கப்படுவதைத் தவிர, அவற்றில் சர்க்கரை, உப்பு போன்றவை அதிகமாக இருக்கும். எனவே எண்ணெயில் பொரித்த எந்த உணவுகளையும் அளவாக சாப்பிடுங்கள்.
திரவங்களை அதிகம் குடிக்கவும் : தீபாவளி பண்டிகையின் போது வெறும் பலகாரங்களை மட்டும் சாப்பிடாமல், எலுமிச்சை ஜூஸ், மோர், இளநீர் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். இப்படி குடிப்பதன் மூலம் உடலின் எலக்ட்ரோலைட்டுக்களின் அளவை சமநிலையில் பராமரிக்கலாம்.
கலோரி உணவுகளை தவிர்க்கவும் : தீபாவளி பண்டிகையின் போது இனிப்பு நிறைந்த பலகாரங்களை வீட்டில் செய்திருந்தால், அவற்றை அளவாக சாப்பிடுவது மட்டுமல்லாமல், முடிந்தவரை தவிர்க்க முயற்சிப்பது நல்லது. இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பது மட்டுமின்றி, கொலஸ்ட்ரால் அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நீரை அதிகம் அருந்தவும் : பண்டிகை காலங்களில் அதிகமாக அலைச்சல் இருக்கும். அதோடு வேலையும் அதிகம் இருக்கும். இதனால் மிகுந்த உடல் சோர்வுடன், நீரிழப்பும் ஏற்படலாம். அதே வேளையில் அதிகம் பசி எடுக்கும். அப்போது பலகாரங்களை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு தான் அதிகரிக்கும். எனவே அப்போது நீரைக் குடிக்க முயற்சி செய்யுங்கள். அதுவும் 1 மணிநேரத்திற்கு ஒருமுறை குறைந்தது 1 டம்ளர் நீரைக் குடிக்க முயற்சி செய்யுங்கள்.
உடற்பயிற்சி செய்யவும் : பண்டிகை நாட்களுக்கு முந்தைய நாள் நீண்ட நேரம் விழித்திருந்து வீட்டு வேலைகளை செய்து தாமதமாக தூங்குவதால், நிறைய பேர் பண்டிகை நாட்களில் காலையில் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்காமல், உடற்பயிற்சி செய்வதைத் தவிர்ப்பார்கள். ஒருவேளை உங்களால் காலையில் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும், மாலையில் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.
Read more ; ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் வயது வரம்பை குறைக்க வேண்டும்..!! – பிரதமருக்கு திருமாவளவன் கடிதம்