மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்..!! மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி..!!
அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் கை, கால் மறுத்துப் போகும் நிலை போன்ற உடல்நலக்குறைவு காரணமாக கடந்த நவம்பர் 15ஆம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல். ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.