இந்த மெசேஜ் உங்களுக்கு வந்துச்சா..? வங்கிக் கணக்கை உடனே செக் பண்ணுங்க..!! பணம் பறிபோகும் அபாயம்..!!
சமீபகாலமாகவே, வங்கிகளின் பெயர்களை சொல்லி மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதனால்தான், வாடிக்கையாளர்கள் யாரும், தங்களுடைய வங்கிக்கணக்கு குறித்த விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும். யாரிமமும் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மோசடியாளர்கள் புதுவிதமான வகையில் உங்களை அணுகலாம் என்று வங்கிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
வங்கியிலிருந்து பேசுகிறோம், மாதத்தவணையில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக விவரங்களை சொல்லுங்கள், வங்கிக்கணக்கு ஓடிபி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டின் சிவிவி எண், பாஸ்வேர்டு, அக்கவுண்ட் நம்பர் என்ன? என்றெல்லாம் கேட்டு மோசடியில் ஈடுபடுவார்கள். இதனால், வாடிக்கையாளர்கள் கவனமுடன் இருந்து எந்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர். இருப்பினும், மோசடிப்பேர்களின் பிடியில் சில அப்பாவிகள் சிக்கிவிடுகின்றனர்.
அந்த வகையில், சென்னையை அடுத்த புழல் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லத்தீப். இவரது செல்போனுக்கு மெசேஜ் லிங்க் ஒன்று வந்துள்ளது. அதில், உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. உடனடியாக லிங்கில் வங்கிக் கணக்கின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை உண்மை என்று நம்பிய அவரும், தன்னுடைய வங்கிக் கணக்கின் விவரங்களை அந்த லிங்கில் பதிவு செய்துள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக் வணக்கில் இருந்து ரூ.44 ஆயிரம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்திருக்கிறது. இதனைப்பார்த்து அதிர்ந்து போன அப்துல் லத்தீப், அப்போதுதான் மோசடி நடந்திருப்பதை அறிந்தார். இதுபோல் புழலை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும், மர்ம கும்பல் வங்கிக் கணக்கு விபரம், பான் எண் விவரங்களை பதிவு செய்யக்கூறி மெசேஜ் மற்றும் லிங்க் அனுப்பி ரூ.10 ஆயிரத்தை மோசடி செய்திருக்கின்றனர்.
இந்த மோசடி சம்பவங்கள் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். போலீசார் இதைப்பற்றி கூறுகையில், ”செல்போனுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுந்தகவல், லிங்கை கிளிக் செய்யாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இணையதள முகவரி சரியாக இருந்தால் மட்டுமே பதிலளிக்க வேண்டும். இல்லையென்றால் வங்கிக்கு நேரில் சென்று தங்களது சந்தேகங்கள் குறித்து கேட்டால் பணம் இழப்பை தவிர்க்கலாம்” என்று தெரிவித்துள்ளனர்.