ஃபிளிப்கார்டில் ஷூ ஆர்டர் செய்த இளைஞருக்கு பார்சலில் வந்த பொருள் என்ன தெரியுமா..?
கோவை மாவட்டம் அங்கலக்குறிச்சியில் ஆன்லைனில் ஷூ ஆர்டர் செய்தவருக்கு ஒரு பழைய கிழிந்த ஷூவும், ஒரு அறுந்த செருப்பும் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வதையே பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர். எலக்ட்ரானிக் பொருட்கள், காலணிகள், ஆடைகளையும் ஆன்லைனில் மக்கள் அதிகளவு வாங்கி குவித்து வருகின்றனர். ஆனால், அவ்வாறு ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது ஒருசில குளறுபடிகள் ஏற்படுவதும் வாடிக்கையாகியுள்ளது.
அந்தவகையில், கோவை மாவட்டம் அங்கலக்குறிச்சியை சேர்ந்தவர் பிரியன். தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர், கடந்த டிசம்பர் 23ஆம் தேதி ஃப்ளிப்கார்ட்டில் புதிய வகை ஷூ ஒன்றை ஆர்டர் செய்தார். தொடர்ந்து 8 நாட்களுக்கு பிறகு தனது கைக்கு வந்த பார்சலை, ஆசை ஆசையாக பிரித்து பார்த்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார். பிதாமகன் திரைப்படத்தில் சூர்யா வாடிக்கையாளர்கள் கேட்ட பொருட்களுக்கு பதிலாக சரோஜா தேவி பயன்படுத்திய அற்புதப் பொருள் என ஒரு சோப்பு டப்பாவை ஏமாற்றி விற்பனை செய்வார்.
அதேபோல புதிய ஷூ ஆர்டர் செய்த இளைஞருக்கு ஒரு பழைய கிழிந்த ஷூவையும், ஒரு அறுந்த செறுப்பையும் வைத்து அனுப்பியுள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் Filpkart வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். செல்போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல், டேப்லெட் ஆர்டர் செய்தவருக்கு சோப்பு பவுடர், டிவி ஆர்டர் செய்தவருக்கு மலிவான விலை டிவி டெலிவரி செய்யப்படுவது போன்ற குளறுபடிகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இவற்றை சரி செய்ய வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மறுபுறம் பொதுமக்கள் நேரடியாக சென்று கடைகளில் பொருட்களை வாங்கினால் வியாபாரிகளும் பயனடைவார்கள் எனவும், அதை புரிந்துகொண்டு இது போன்ற நிறுவனங்களில் பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.