Fact Check: 'சாவர்க்கரை இழிவாக பேசினாரா அண்ணாமலை!!' உண்மை என்ன?
சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் காலை நக்கியதாக பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசும் வீடியோவின் உண்மைத்தன்மை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்துத்துவ அமைப்பின் முன்னோடியாக சொல்லப்படும் வி.டி.சாவர்க்கரை பாஜக மாநிலத் தலைவர் இழிவுபடுத்தி பேசியதாக அந்த வீடியோவின் மூலம் உள்ளடக்கம் உள்ளது.
சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் காலணியை நக்கியவர் என்று அண்ணாமலை கூறியதாக வைரலாகும் வீடியோவில், “தமிழகத்தில் பொதுவாக என்ன சொல்லுகின்றார்கள் என்றால் பிரிட்டிஷ் பூட் லிக்கர் அப்படி என்பார்கள். ஆங்கிலேயரின் பூட்டை நக்கிய வீர் சாவர்க்கர் அப்படினு பொதுவாக பேசுவார்கள்” என்று அண்ணாமலை பேசுவதை காண முடிகின்றது. மேலும் அந்த வீடியோவில் காலபானி’ என்ற மலையாள திரைப்படத்தில், நடிகர் மோகன்லால், ஒரு பிரிட்டிஷ் அதிகாரியின் காலணியை நக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
11 வினாடிகள் கொண்ட வீடியோ கிளிப்பில் அண்ணாமலை பேசும்படியான காட்சிகளை X பயனர் பகிர்ந்துள்ளார் . மேலும் அந்த வீடியோவுக்கான கேப்சனில் “இந்த வீடியோவைத்தான் இரண்டு நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். ஆட்டுக் குட்டி அண்ணாமலை பாஜகவில் சேரும் முன் சாவர்க்கரைப் பற்றிய பேசியவை” என குறிப்பிடப்பட்டிருந்தது.
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவை நியூஸ் மீட்டர் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுள் தேடலுக்கு உட்படுத்தியபோது Inside Tamil எனும் யூடியூப் சேனலில் இந்த வீடியோவின் முழுமையான வீடியோவை காண முடிந்தது. அந்த முழு வீடியோவில், “தமிழகத்தில், வீர் சாவர்க்கரைப் பற்றி பேசும்போது உடனடியாக அவரை விமர்சிக்கிறார்கள். அவர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்டவர். ஆங்கிலேயரின் காலணிகளை வீர் சாவர்க்கர் நக்கினார் என்று சொல்வார்கள” என பேசியிருப்பார். குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டிய பகுதிதான் வைரலான கிளிப்பில் இடம்பெற்றது.
இதனடிப்படையில் பார்க்கையில் அண்ணாமலை பேசியதில் முற்பகுதியையும் பிற்பகுதியையும் நீக்கி வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என நமக்கு தெளிவாகின்றது. ஏறக்குறைய 25 நிமிடம் நடந்த நேர்காணலில் சாவர்க்கர் குற்றமற்றவர் என்றும், அவர் செய்தது எதுவும் தவறில்லை என்றும் அண்ணாமலை தொடர்ந்து வாதிட்டிருப்பதை காண முடிந்தது.
Read more ; மண் மற்றும் பாறைகளை சேமிக்க, நிலவின் எய்ட்கன் பகுதியில் தரையிறங்கியது சீன விண்கலம்!!