நனைந்த படியே வீடு திரும்பிய மாணவர்கள்.. பள்ளி விடுமுறை அறிவிப்பில் தாமதம் ஏன்? - உதயநிதி விளக்கம்
சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் கே.கே.நகர், நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், கிண்டி, திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காலை 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்றே சென்னைக்கு கனமழை என எச்சரித்தும் பள்ளிக் கல்வித் துறை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் ஆட்சியர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் மேலும் மழை தீவிரமடைந்ததை அடுத்து காலை சுமார் 7.15 மணிக்கு சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னையில் பெரும்பாலான பள்ளிகள் காலை 7.30 மணிக்கே தொடங்கிவிடும் நிலையில் குழந்தைகள் காலையிலேயே பள்ளிக்குச் சென்றனர். திடீரென விடுமுறை அறிவித்ததால் மழையில் நனைந்தபடியே அவர்கள் திரும்பி வந்தனர்.
இதனால் பெற்றோர் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் விடுமுறை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உதயநிதி கூறுகையில் சென்னையில் கனமழை பெய்யும் என அறிவித்த நிலையில் மழையே வரவில்லை. நள்ளிரவு 2 மணிக்கு மேல்தான் மழை பெய்யத் தொடங்கியது. இதனால்தான் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க முடியாமல் போனது.
இனி வரும் காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் தாமதம் ஏற்படாது. நள்ளிரவுக்கு பிறகே மழை தீவிரமடைந்ததால் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது என உதயநிதி தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more ; திருப்பதி லட்டு தயாரிக்க ஆவின் நெய் விநியோகம்.. தேவஸ்தானத்துடன் டீல் பேசும் ஆவின்..!!