உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா..? அதிருப்தியில் மூத்த அமைச்சர்கள்..? சமாதானம் செய்யும் தலைமை..!! திமுகவில் சலசலப்பு..!!
சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்த உதயநிதி ஸ்டாலின், கடந்த 2018 முதல் தீவிர அரசியலில் இறங்கினார். 2019இல் நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த தேர்தலில் திமுக கூட்டணி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40-க்கு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து, உதயநிதிக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி அதே ஆண்டு வழங்கப்பட்டது. பின்னர் 2021இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
ஆனால், 2021இல் உதயநிதி அமைச்சராவார் என்று திமுகவினர் எதிர்பார்த்த நிலையில், அவர் அமைச்சராகவில்லை. எனினும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற அரசு பணிகளில் உதயநிதி பங்கேற்று வந்தார். அவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று திமுக மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பின்னர், ஒருவழியாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானார்.
அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஆகியவை வழங்கப்பட்டன. இதில், சிறப்பு திட்டங்கள் மற்றும் செயலாக்கத்துறை என்பது தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களும், அனைத்து துறைகளும் உள்ளடக்கிய நிர்வாகி பணியாகும். முதல்வர் வசம் இருந்த இந்த துறையின் அமைச்சராக உதயநிதி இருப்பதால், கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் உதயநிதி முடிவெடுக்க முடியும் என்கிற நிலை இருக்கிறது.
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என்று திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதுபற்றி பலமுறை தகவல்கள் பரவின. ஆனால், அத்தனை முறையும் இது வதந்தி என்றே முதல்வர் முக.ஸ்டாலின் கூறினார். ஒருமுறை இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, 'உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து இருக்கிறதே தவிர இன்னும் பழுக்கவில்லை' என்று கூறினார்.
இந்நிலையில் தான், உதயநிதி எந்த நேரத்திலும் துணை முதல்வராகலாம் என்று செய்திகள் பரவி வரும் நிலையில், அவருக்கு எதிர்ப்பும் கிளப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவையில், மூத்த தலைவர்களுக்கு பதிலாக இளம் ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்பது உதயநிதியின் திட்டமாக இருக்கிறது. இதனால், சில சீனியர் அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் தலைமை ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.