பரபரப்பு...! தமிழக அரசுக்கு எதிராக பாஜக சார்பில் இன்று தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம்...!
தமிழக அரசுக்கு எதிராக பாஜக சார்பில் இன்று தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, 19-ம் தேதி இரவு 11 மணி நிலவரப்படி 17 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை நிலவரப்படி, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது. இதில் 3 பேர் பெண்கள். உயிரிழந்தவர்களில் 31 பேரின் உடல்கள், நேற்று ஒப்படைக்கப்பட்டன.
இதற்கிடையே, அதே பகுதியில் மேலும் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர்களும் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அந்த வகையில், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மரில் 168 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசுக்கு எதிராக பாஜக சார்பில் இன்று தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டம் மிகப் பெரிய அளவில் இருக்க வேண்டும். இந்த ஆர்ப்பாட்டம் அரசியல் மாற்றத்துக்கு மிகப் பெரிய அச்சாரமாக அமைய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் ஆர்ப்பாட்டம் என்பதால் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று பாஜக தொண்டர்களுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.