’சென்னை பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்திடுக’..!! நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கோரிக்கை..!!
சென்னையில் கனமழை பெய்து பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மழை பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று திமுக மக்களவைத் தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு தினங்களாக இரவு பகல் பாராமல் மீட்பு பணிகளும், நிவாரணப் பணிகளும் நடந்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் நின்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் விறுவிறுப்பு காட்டி வருகின்றனர்.
இன்று ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரூ.5060 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்புகளைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக 1.20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் படகுகளில் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மிக மோசமாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக புயல் பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். ஒன்றிய குழுவை உடனே அனுப்பிப் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்து நிவாரண உதவி வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.