ரயில் பயணிகளே..!! விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து..!! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!
ஃபெஞ்சல் புயல் நேற்று நள்ளிரவில் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதையடுத்து, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. வியாழக்கிழமை காலை முதல் பெய்து வரும் மழை இன்றும் விடாமல் தொடர்ந்து பெய்தது. அதி கனமழை காரணமாக விழுப்புரம் நகரம் முழுவதுமே வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழை, வெள்ளம் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையேயான ரயில்வே பாலம் மழை நீரில் மூழ்கியுள்ளதால், சென்னையில் இருந்து விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த பல்லவன், வைகை விரைவு ரயில்கள் விழுப்புரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு நேற்று இரவு புறப்பட்ட ரயில்கள் காட்பாடி வழியாக எழும்பூருக்கு மீண்டும் திருப்பி விடப்பட்டுள்ளன. இன்று காலை தென்மாவட்டங்களில் இருந்து புறப்பட வேண்டிய நெல்லை வந்தே பாரத், வைகை, பல்லவன், சோழன் விரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய தேஜஸ் ரயில், குருவாயூர் விரைவு ரயில் மற்றும் புதுச்சேரி செல்லக்கூடிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சில ரயில்கள் மட்டும் மாற்று வழித்தடத்திலும், சில ரயில்கள் சென்னை - விழுப்புரம் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சந்தேகங்களுக்கு சென்னை சென்ட்ரல் - 044 25354140, சென்னை எழும்பூர் - 9003161811, தாம்பரம் - 8610459668, செங்கல்பட்டு - 9345962113 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : 5 ஏக்கர் நிலம், கார், டிராக்டர் இருந்தும் உரிமைத்தொகை ரூ.1,000 பெறுகிறார்களா..? உடனே புகாரளிக்கலாம்..!!