சற்றுமுன்..! தென் மாவட்டத்தில் ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு...!
நெல்லை மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. திருநெல்வேலி மாநகரின் பல்வேறு பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்தது. கனமழை காரணமாக தென் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகளை பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்பட முடியவில்லை.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளுக்கான தேதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதன்படி, 6 முதல் 10 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வருகின்ற ஜனவரி 4ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜனவரி 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கடந்த 23ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜனவரி 1-ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை. அதன்பிறகு மீண்டும் வருகின்ற 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.