தீவிர புயலாக மாறும் ’டானா’..!! 120 கிமீ வேகத்தில் சூறைக்காற்று..!! சென்னையை பாதிக்குமா..?
வங்கக்கடலில் "டானா" புயல் தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா – மேற்கு வங்க கடற்கரையை 24ஆம் தேதி நெருங்கும். இந்த புயல் கரையை கடக்கும்போது, 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு இடையே காற்று வேகம் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை தாக்குமா? அதாவது, சென்னைக்கு அருகே வரும் போதே ஒன்றிரண்டு நாட்கள் மழை பெய்யும். அதன்பின் மழை இருக்காது. இன்னும் சொல்லப்போனால் இதனால் வெயில் அடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் இந்த புயல், மழை கொண்ட மேகங்களை ஒடிசா, மேற்கு வங்கம் நோக்கி நகர்த்தி செல்லும். இதனால் சென்னைக்கு வெயில் அடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இது தொடர்பான சென்னை வானிலை மைய ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவலில், இந்த புயல் சென்னை நேரடியாக பாதிக்காது. ஆனால், சென்னைக்கு லேசான மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
22.10.2024 : தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
23.10.2024 : தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.