தீபாவளிக்கு ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில்...! அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு..!
ரேஷன் கடைகளில் பருப்பும், பாமாயிலும் தீபாவளிக்குத் தங்கு தடையின்றி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சரிவர துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை. மூன்று மாதங்களாக யாருக்கும் துவரம் பருப்பு கிடைக்கவில்லை. வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.200 வரை விற்கப்படுகிறது. இதனால், ரேஷனில் கிலோ ரூ.30-க்கு கிடைக்கும் துவரம் பருப்பை நம்பியே ஏழை, நடுத்தர மக்கள் உள்ளனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில், ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக 20,000 டன் துவரம் பருப்பு ஆர்டர் செய்யப்பட்டதாகவும், அதில் 3,473 டன் மட்டுமே மட்டுமே விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அரசின் அலட்சியத்தால் மீதமுள்ள 16,527 டன் துவரம் பருப்பு உரிய நேரத்தில் வந்து சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தீபாவளிக்கு முன் துவரம் பருப்பு பெற தகுதியான 1 கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் துவரம் பருப்பு வழங்க முடியாத நிலை உள்ளது. இது ஏழை, நடுத்தர மக்களை மிக கடுமையாகப் பாதிக்கும். எனவே, அரசு, போர்க்கால அடிப்படையில் துவரம் பருப்பை கொள்முதல் செய்து அனைவருக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக துவரம் பருப்பு மற்றும பாமாயில் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என எதிர் கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பருப்பும், பாமாயிலும் தீபாவளிக்குத் தங்கு தடையின்றி வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்
இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; அக்டோபர் மாதத்துக்கான துவரம் பருப்பு ஒதுக்கீடு 20,751 மெட்ரிக் டன்னில் நேற்று முன்தினம் அக்.15-ம் தேதி வரை 9,461 மெட்ரிக் டன் பருப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. 2.04 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் ஒதுக்கீட்டில் 97.83 லட்சம் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ளவை விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆதலால் தீபாவளிக்கு எவ்விதத் தட்டுப்பாடின்றி துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.