Alert...! தென்மேற்கு வங்கக்கடலில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்... மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்...!
தமிழகத்தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு இலங்கை கடல் மற்றும் அதையட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை சில இடங்களிலும், வரும் 16, 17-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 18-ம் தேதி கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 15-ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.