தமிழகத்தை நெருங்கும் மிக்ஜாம் புயல்.! 12 பாதுகாப்பு கட்டளைகள் அறிவித்திருக்கும் மாநில அரசு.!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நாள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தமிழகத்தின் அருகே உருவாகி இருக்கும் மிக்ஜாம் புயல் நாளை கரையை கடக்க இருப்பதால் தமிழகம் முழுவதும் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.
இந்தப் புயல் சென்னை அருகே கரையை கடக்க இருப்பதால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்வதற்கான அபாயங்கள் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அரசு விடுக்கும் எச்சரிக்கைகளை கவனமுடன் பின்பற்ற வேண்டும் என மாநில அரசு மற்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான 12 அம்சங்கள் அடங்கிய அறிக்கையையும் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையின் படி தமிழக வானிலை ஆய்வு மையம் மற்றும் பேரிடர் மேலாண்மை குழு வெளியிடும் அறிவுரைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என்னைக் கேட்டுக் கொண்டுள்ளது. புயல் எச்சரிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கேட்டு வரவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி முகாம்களில் சென்று தங்கிக் கொள்ள வேண்டும். முக்கிய பொருள்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை வாங்கி வீடுகளில் சேமித்து வைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறது. கயிறு, மெழுகுவர்த்தி, முதலுதவி பெட்டி, எமர்ஜென்சி லைட் போன்றவற்றை தயாராக வைத்திருக்குமாறும் பொது மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் ஆபத்தான இடங்களில் நின்று வேடிக்கை பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அரசு அறிவுறுத்தியிருக்கிறது. மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் புயல் காரணமாக விழுவதற்கு வாய்ப்பு இருப்பதால் அவற்றில் அருகில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறது. புயல் எச்சரிக்கையை திரும்பப்பெறும் வரை பாதுகாப்பு அறிவுரைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் – 1070; மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம் – 1077; வாட்ஸ் அப் எண். – 94458 69848 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்திருக்கிறது.