வேலூர் பெண்ணிற்கு அடித்தது ஜாக்பாட்.. கடன் வாங்கிய வங்கியிடமே இழப்பீடு..!! - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி
வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்த தொழில் முனைவோர் தாட்சாயினி என்பவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகைக்கடன் மற்றும் வாகன கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடன் தொகையை செலுத்திய பின்னர், தடையில்லா சான்றை வங்கி நிர்வாகம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.. இந்த சேவை குறைபாட்டிற்காக வங்கி மீது வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் வேலூர் நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு வழங்கிய தீர்ப்பை பற்றி பார்ப்போம்.
வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்த தாட்சாயிணி என்ற தொழில் முனைவோர், கடந்த 2018-ம் ஆண்டு அல்லாபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகைக்கடன் மற்றும் வாகன கடன் வாங்கியிருக்கிறார். அதற்கான வட்டி மற்றும் அசல்தொகை முழுவதையும் தாட்சாயிணி கடந்தாண்டு செலுத்தியுள்ளார். கடன்தொகையை செலுத்திய பின்னர் , முறையாக வழங்க வேண்டிய தடையில்லா சான்றை ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் வங்கி நிர்வாகம் கொடுக்கவில்லை என்று புகார் எழுந்தது. இதுபற்றி தாட்சாயிணி பலமுறை கேட்டும் வங்கி நிர்வாகம் பதில் அளிக்கவில்லையாம். இதனால் அதிருப்தி அடைந்த தாட்சாயிணி நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்தார்.
இந்த வழக்கில் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி மீனாட்சி சுந்தரம் தீர்ப்பு வழங்கினார். அதில் சேவை குறைபாடு காரணமாக வேலூர் தொழில்முனைவோர் தாட்சாயிணிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதுக்காக ரூ.25 ஆயிரம் அபராதம் ஆகியவற்றை வங்கி ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். முன்னதாக சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் கிரெடிட் கார்டு சேவையில் ஏற்பட்ட குறைபாட்டிற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றது குறிப்பிடத்தக்கது.