அடுத்த அவதாரத்தை எடுத்த கொரோனா!… கர்நாடக அரசு போட்ட அதிரடி உத்தரவு!
திடீரென மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
உருமாறிய ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் மீண்டும் உலகளவில் பாதிப்பை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலங்கலிக் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. வைரஸ் அறிகுறிகளுடன் மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர். இந்தநிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,828 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அந்தவகையில் கேரளாவில் இந்த வகை தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அம்மாநில எல்லையை ஒட்டியுள்ள கர்நாடக மாநிலத்தின் குடகு, மங்களூர், சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், இருமல், சளி மற்றும் காய்ச்சலின் அறிகுறிகள் உள்ளவர்களும் மாஸ்க் அணியும்படி கர்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்தார். இப்போது நிலைமை தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்த அவர், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதால் எந்தவொரு கட்டுப்பாடுகளும் தேவையில்லை என்றும் கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் வழிகாட்டுதல்களை வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இதயம், சிறுநீரகம் போன்ற நோய்கள் உள்ளவர்கள், இருமல், சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் கட்டாயமாக முகமூடி அணிய வேண்டும். பொதுமக்களுக்கு இது குறித்துத் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.