கேரளாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோனா!… ஒரே நாளில் 1144 பேர் பாதிப்பு!… அச்சத்தில் மக்கள்!
கேரளாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சீனாவில் இருந்து கடந்த 2019 ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்தியா உள்பட உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியது. இதனால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளில் மக்கள் கொத்து கொத்தாக பலியாகினர். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த உலகமும் முடங்கியது. மேலும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதையடுத்து 2 ஆண்டுகள் கழித்து 2021ல் உலகம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு என்பது லட்சத்தில் இருந்து படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் தான் திடீரென்று தற்போது கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதாவது மத்திய அரசு நேற்று வெளியிட்ட தரவுகளின் படி இந்தியாவில் கொரோனாவால் 1,185 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் கேரளாவில் மட்டும் 1,100 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கேரளாவில் கொரோனா பரவல் திடீரென்று அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் முதல் முறையாக ஜேஎன் 1 வகை கொரோனா இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த வகை கொரோனா வேகமாக பரவக் கூடியது என்பதால் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது
மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பரிசோதனைகள் என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மாத்திரை, மருந்துகள் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு பொதுமக்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்றவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தொற்றுநோய் நிபுணரான மருத்துவர் ஈஸ்வர் கிலாடா கூறுகையில், ''இந்த வைரஸ் என்பது இதுவரை உலகளவில் 38 நாடுகளில் பரவி உள்ளது. இதனால் இது பழைய வைரஸ் தான். ஆனால் இந்தியாவுக்கு புதிதாக பரவி உள்ளது. இது மேல்சுவார வகை சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் சளி, இருமல், மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். தற்போதைய சூழலில் ஐசியூ படுக்கை, வெண்டிலேட்டர் சிகிச்சையில் யாரும் இல்லை. அதிர்ஷ்டவசமாக இறப்புகளும் ஏற்படவில்லை.
இதனால் நாம் பயப்பட வேண்டாம். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்'' என்றார். அதன்படி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது மாஸ்க் அணிதல், கைகளை அவ்வப்போது சுத்தம் செய்தல், கொரோனா பாதிப்புக்கான அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்வது, அறிகுறி உள்ளவர்களை விட்டு விலகி இருப்பது உள்ளிட்டவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளார்.