இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கிறதா கொரோனா மரணங்கள்..? ஒரே நாளில் இத்தனை பேரா..?
இந்தியாவில் கடந்த சில நாட்களாக திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒட்டுமொத்த உலகையும் புரட்டிப்போட்ட கொரோனா பாதிப்பில் இருந்து நாம் ஒன்றும் அவ்வளவு சீக்கிரம் மீண்டுவிடவில்லை. வேக்சின் தொடங்கி பல தீவிர நடவடிக்கைகள் காரணமாகவே கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால், இப்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் திடீரென கொரோனா உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 335 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 1,701ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவ ஆரம்பித்தது முதல் இதுவரை நமது நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு என்பது 4.50 கோடியாக (4,50,04,816) உயர்ந்துள்ளது. அதேபோல கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக (4,44,69,799) அதிகரித்துள்ளது. நமது நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.81%ஆக உள்ளது நமது நாட்டில் கொரோனாவால் இதுவரை 5,33,316 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு இந்தளவுக்கு குறைந்ததற்கும் அதன் தீவிர தன்மை குறைந்ததற்கும் வேக்சின் தான் முக்கிய காரணம். இந்தியாவில் இதுவரை 220.67 கோடி டோஸ் கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது. நமது நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு ஜே.என்.1 வகை கொரோனா தான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்த வகை கொரோனா கேரளாவில் 79 வயதுடைய பெண் ஒருவருக்கு கண்டறியப்பட்டது. கடந்த டிசம்பர் 8ஆம் தேதி திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள காரகுளத்தில் அந்த பெண்ணுக்கு நடத்தப்பட்ட சோதனையில் இந்த ஜேஎன் 1 கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.