விஜய் மாநாட்டில் வெடித்த சர்ச்சை..!! தண்ணீரை தூக்கி வீசுவதால் பரபரப்பு..!! கழிவறை தண்ணீரை குடிக்கும் அவலம்..!!
விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் இடத்தில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியின் வி.சாலையில் இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டையொட்டி கட்சியின் தலைவரான நடிகர் விஜய் நேற்றைய தினமே அங்கு சென்றார். இன்று மாலை 100 அடி கொடிக்கம்பத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றி வைக்கிறார். பிறகு மாநாடு தொடங்க உள்ளது.
இந்த மாநாட்டுக்கு நேற்று இரவே மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் விரைந்தனர். இன்று காலை முதல் தொண்டர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மதியம் 1 மணிக்கே மாநாட்டுக்காக போடப்பட்ட இருக்கைகள் முழுவதுமாக நிரம்பின. இந்த மாநாட்டை பொறுத்தவரை மேடைக்கு மட்டுமே மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அமர்ந்து மாநாட்டை பார்க்கும் இடத்தில் இருக்கை மட்டுமே போடப்பட்டுள்ளது. அதில் மேற்கூரை இல்லை.
இதற்கிடையே தான் இன்று வி.சாலை பகுதியில் வெயில் வெளுத்து வாங்குகிறது. இதனால் தொண்டர்கள் சேரை தலையில் கவிழ்த்து வைத்து வெயிலை சமாளிக்கின்றனர். இன்னொரு தரப்பினர் கட்சியின் துண்டை தலையில் கட்டி வெயிலில் இருந்து தப்பிக்கின்றனர். மேலும் சிலர் தரைவிரிப்புகளை கிழித்து தலையை மறைத்துக் கொள்கின்றனர். ஆனாலும், கூட அதிக வெயில் காரணமாக அடுத்தடுத்து சிறுமி, காவலர், தொண்டர்கள் மயங்கி வருகின்றனர்.
மதியம் 1 மணி நிலவரப்படி காவலர் உள்பட மொத்தம் 60 பேர் மயங்கி உள்ளனர். இவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மயக்கத்துக்கு மாநாடு நடக்கும் இடத்தில் போதிய அளவு தண்ணீர் இல்லாதது தான் காரணம் என்று கூறப்படுகிறது. பெரிய பெரிய டேங்கர்களில் மாநாட்டுக்கு தண்ணீர் கொண்டு வந்து வைக்கப்பட்டது. மதியத்துக்கு மேல் தான் தொண்டர்கள் வருவார்கள் என்ற நிலையில் காலையிலேயே தொண்டர்கள் குவிந்ததால் அந்த தண்ணீர் காலியானது. இதனால் வெயிலுக்கு நடுவே தொண்டர்கள் தண்ணீர் தேடி அலைந்தனர்.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த செக்யூரிட்டிகள் தண்ணீர் பாட்டில்களை தொண்டர்களுக்கு வழங்கினர். இதுதான் சர்ச்சையாகி உள்ளது. அதாவது தண்ணீர் பாட்டில்கள் தொண்டர்களின் கைகளில் நேரடியாக வழங்கப்படவில்லை. விஜய் நடந்து சென்று பேசுவதற்காக அமைக்கப்பட்ட 'ரேம்ப் வாக்' மேடையில் இருந்து தண்ணீர் பாட்டில்கள் ஒவ்வொன்றாக தூக்கி வீசப்பட்டன. அதனை தொண்டர்கள் கேட்ச் பிடித்து பயன்படுத்திக் கொண்டனர். ஆனாலும் கூட ஒரே நேரத்தில் பல தொண்டர்கள் தண்ணீர் பாட்டிலை நாடியதால் பலருக்கும் கிடைக்காமல் போனது. இது தொண்டர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் தொண்டர்கள் தவித்து வருகின்றனர். முறையாக குடிநீர் வசதி செய்யப்படாததால், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கழிவறை பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பாட்டில்களில் பிடித்துச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழக மாநாடு மாலை 4 மணிக்குத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு மணிநேரம் முன் கூட்டியே தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. மாநாடு முடிந்து இரவு செல்லும் நேரத்தைக் கணக்கிட்டு ஒரு மணி நேரம் முன்கூட்டியே மாலை 3 மணிக்கு மாநாடு தொடங்கவுள்ளது. இரவில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் வி. சாலையில் இருந்து வெளியேறும் என்பதால், முன்கூட்டியே மாநாடு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
Read More : ‘தயவு செய்து கொஞ்சம் பொறுமையா இருங்க’..!! ‘தண்ணீர் பாட்டிலுடன் மிக்சர், பிஸ்கட் வரும்’..!!