முதல்வர் நிகழ்ச்சியில் வெடித்த சர்ச்சை..!! கருப்பு நிற துப்பட்டாவை வாங்கி வைத்தது ஏன்..? காவல்துறை பரபரப்பு விளக்கம்..!!
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கை முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கருப்பு நிற துப்பட்டாவை அணிந்து வந்த மாணவிகளிடம் ‘கருப்பு நிற உடை அணியக்கூடாது’ எனக்கூறி அவற்றை அதிகாரிகள் வாங்கி வைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சி முடிந்த பின்னரே துப்பட்டாக்கள் உரிய மாணவிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, கருப்பு நிற கைப்பைகள், குடை போன்றவையும் நுழைவுவாயிலேயே வாங்கி வைக்கப்பட்டன. பின்னர், நிகழ்ச்சி முடிந்ததும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”எழும்பூர் பகுதியில் நடைபெற்ற அரசு விழா நிகழ்வின்போது, சென்னை காவல் பிரிவினர் விழா நடக்கும் உள் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்ட நபர்களை தணிக்கை செய்து அனுப்பும் போது, கருப்பு துப்பட்டா அணிந்து வந்தவரிடம் துப்பட்டாவை வாங்கி வைத்துக் கொண்டனர். இந்த நடவடிக்கை அங்கு பணியில் இருந்த காவல் ஆளிநர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் இது நிகழ்ந்திருக்கிறது. இனி அவ்வாறு நிகழாத வண்ணம் சென்னை காவல் பிரிவிற்கு (SCP) தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.