தேர்தல் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த கார்கே.. "மோடியை அகற்றும் வரை உயிருடன் இருப்பேன்..!!" - காங்கிரஸ் தலைவர் சூளுரை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உரை நிகழ்த்தும் போது, அவருக்கு மயக்கம் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் சக காங்கிரஸ் தலைவர்கள் உடனடியாக அவருக்கு தண்ணீர் கொடுத்து சரி செய்தனர். இதனால் தேர்தல் பிரச்சாரம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் மூன்றாம் கட்ட தேர்தலுக்கு முன்னதாக கதுவாவின் ஜஸ்ரோட்டாவில் கார்கே உரை நிகழ்த்தினார். அப்போது உடல் நலம் சரி இல்லாமல் மயங்கி விழுந்தார். பின்பு தண்ணீர் குடித்த பிறகு, கார்கே தனது உரையை மீண்டும் தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில், நான் விரைவில் இறக்க மாட்டேன் என்றும், பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை உயிருடன் இருப்பேன் என்றும் கூறினார். மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க நாங்கள் போராடுவோம், எனக்கு 83 வயதாகிறது, நான் இவ்வளவு சீக்கிரம் இறக்கப் போவதில்லை, பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் உயிருடன் இருப்பேன்," என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய கார்கே, மத்திய அரசு தேர்தலை நடத்த விரும்பவில்லை. அவர்கள் விரும்பினால் முன்னவே அதைச் செய்திருப்பார்கள். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு தேர்தலுக்குத் தயாராகத் தொடங்கினர். லெப்டினன்ட் கவர்னர் மூலம் ரிமோட் கண்ட்ரோல் அரசாங்கத்தை இயக்க பாஜக விரும்பியது.” என்று அவர் மேலும் கூறினார். 2019 ஆகஸ்டில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 3ஆம் தேதியும், முடிவுகள் அக்டோபர் 8ஆம் தேதியும் அறிவிக்கப்படும்.
Read more ; டிகிரி முடித்திருந்தால் போதும்.. நகராட்சி நிர்வாகத் துறையில் வேலை..!! – ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..