பெண்களின் உடல் அமைப்பு குறித்து கருத்து தெரிவிப்பது பாலியல் துன்புறுத்தல் தான்..!! - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளது. சிறுமிகளின் உடல்கள் குறித்து தகாத கருத்துக்களை கூறுவது அவர்களின் கண்ணியத்தை திட்டமிட்டு மீறுவதாகும். இது பாலியல் துன்புறுத்தல் குற்றமாக கருதப்பட வேண்டும். தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி கேரள மாநில மின்சார வாரியத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றம் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தது.
அதே நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், பணியில் இருந்தபோது தன்னை துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்தார். கடந்த 2013-ம் ஆண்டு முதல் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி வந்ததாகவும், அதன் பிறகு அவதூறான செய்திகள் மற்றும் குரல் அழைப்புகளை அனுப்பியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். தனது உடல் அமைப்பைக் குறிப்பிட்டு தகாத கருத்துகளால் துன்புறுத்தப்பட்டதாக அவர் கூறினார். அவர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கேரள உயர் நீதிமன்றத்தில் முன்னாள் ஊழியர் மனு தாக்கல் செய்தார். அவர் அழகான உடல்வாகு கொண்டவர் என்று தான் கூறியதாக கூறிய அவர், இதை பாலியல் வன்கொடுமை குற்றமாக கருத வேண்டாம் என நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார். ஆனால், அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. பெண்களின் உடலமைப்பு குறித்து கருத்து தெரிவிப்பது கூட பாலியல் துன்புறுத்தல் பிரிவின் கீழ் வரும் என்று கூறி அவரது மனுவை நிராகரித்தது.