விரைவில் வருகிறது... ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்...!
பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில், தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51, 954 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இவர்களில் 6 கோடிக்கும் அதிகமான நபர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அனைவருக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது, சர்க்கரை 1 கிலோ, ரூ. 13.50, கோதுமை ரூ.7.50, மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 13.60 – 14.20, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு கிலோ ரூ. 30.00, பாமாயில் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து, கடந்த 2023-ம் ஆண்டு முதல், நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. விவசாயிகளிடமிருந்து ஆண்டு முழுவதும் கேழ்வரகு கொள்முதல் செய்வதற்கு இந்திய உணவு கழகத்திடம் அனுமதியையும் தமிழக உணவுத் துறை கேட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதேபோல பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கப்பட வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. மேலும் ரேஷன் கடைகளுக்கு ஒரே கிழமையில் வார விடுமுறை அளிப்பது குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.