இந்தியில் கலைஞர் நாணயம்.. ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்காதது ஏன்? - ஸ்டாலின் விளக்கம்
திமுகவும் காங்கிரசும் பிரிக்க முடியாத நட்பாக பல ஆண்டுகள் தொடர்ந்து வருகிறது. இந்த கூட்டணி தமிழகத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இருப்பினும் மத்தியில் காங்கிரஸ் அரசால் 3வது முறையாகவும் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை உள்ளது.
இந்தநிலையில் தான் கலைஞர் கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விழாவில் பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். நேற்றைய விழாவை பார்க்கும் போது திமுக- பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதோ என்று நினைக்க தோன்றும் அளவிற்கு இரு தரப்பும் நட்பு பாராட்டினார்கள். குறிப்பாக நாணய வெளியீட்டு விழா அரசு விழா என்று வைத்துக்கொண்டாலும் கூட கலைஞர் நினைவிடத்திற்கு ராஜ்நாத் சிங், அண்ணாமலை, எல்.முருகன் என பாஜக பட்டாளமே படையெடுத்தது. இது மட்டுமில்லாமல் பிரதமர் மோடி கலைஞர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்.
ஆனால், கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை. மேலும், கலைஞர் நாணயத்தில் இந்தி மொழி வாசகங்கள் அச்சிடப்பட்டது. இந்த இரண்டு விஷயங்களும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கலைஞர் நாணயத்தில் இந்தி மொழி வாசகங்கள் அச்சிடப்பட்டது ஏன் என்றும், நாணய வெளியீட்டு விழாவுக்கு ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படாதது ஏன் எனவும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து திருமண நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "எதிர்க்கட்சித் தலைவர் நேற்று பேட்டி கொடுக்கிறார். என்னவென்றால், நாணயம் வெளியிடுகிறார்கள். இந்தியில் இருக்கிறது. தமிழில் இல்லை. தமிழ், தமிழ் என்று முழங்குகிறார்களே, இந்தியில் இருக்கிறது என்று சொல்கிறார். முதலில் அரசியல் தெரிந்திருக்கவேண்டும். இல்லை நாட்டின் நடப்பு புரிந்திருக்கவேண்டும்.
அந்த நிகழ்ச்சி, மத்திய அரசின் மூலமாக நடைபெறக்கூடிய நிகழ்ச்சி. ஏற்கனவே, மறைந்த எம்.ஜி.ஆருக்கு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதைபோல அண்ணாவுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த நாணயத்தை எல்லாம் ஒருவேளை பார்த்திருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். அதை எடுத்து பாருங்கள். அனைத்து தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடுகிறபோது மத்திய அரசு இந்தி எழுத்துக்கள் தான் அமைந்திருக்கும்.
அண்ணாவுக்கு நாணயத்தை வெளியிடுகிறபோது, அண்ணாவின் தமிழ் கையெழுத்து நாணயத்தில் பொறிக்கப்பட்டு அதற்கு பிறகுதான் அது வெளியிடப்பட்டது. அது போலதான், கலைஞர் நாணயத்தை வெளியிடுகின்றபோது கலைஞருக்கு மிகவும் பிடித்த தமிழ் வெல்லும் என்பது தமிழில்தான் எழுதப்பட்டிருக்கிறது. இதைக்கூட அவர் பார்க்காமல்,, இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு வந்து வாய்த்திருக்கிறார் என்றுதான் வருத்தமாக இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ராகுல் காந்திக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என எடப்பாடி பழனிச்சாமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “நிகழ்ச்சியை நடத்தியது ஒன்றிய அரசு. அது ஒன்றிய அரசின் நிகழ்ச்சி. அதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அதன் அடிப்படையில்தான் நிகழ்ச்சி நடந்தது. இந்த சராசரி அறிவு கூட இல்லாமல், ஒரு எதிர்க் கட்சித் தலைவர் இருக்கிறார் என்பதுதான் வேதனையாக இருக்கிறது'' இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Read more ; ஆடு, மாடு, கோழி, வளர்க்க ரூ.15 ஆயிரம் மானியம்..!! – தமிழக அரசு அறிவிப்பு