திமுக அரசும், தமிழக ஆளுநரும் காதலர்கள் போல தற்போது இணக்கமாக இருக்காங்க..! செல்லூர் ராஜூ விமர்சனம்
திமுக அரசும், தமிழக ஆளுநரும் காதலர்கள் போல தற்போது இணக்கமாக உள்ளனர். புது காதலன், புது காதலி போல தமிழக அரசும், ஆளுநரும் உள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ; அதிமுக ஆட்சியில் பல பருவ மழைகளையும், புயல்களையும் எதிர்கொண்டு மக்களுக்கு தேவையானவற்றை சிறப்பாக செய்து கொடுத்தோம். ஆனால், திமுக அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை. மழை நேரத்தில் முதல்வர் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் போட்டோ ஷூட் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
சனிக்கிழமை இரவு பெய்த மழைக்கே மதுரை தாங்கவில்லை. மழை பெய்யும் போது அமைச்சர், மேயர் வந்து பார்க்காமல் மழை நீர் வடிந்தவுடன் ஆய்வு செய்கிறார்கள். திமுக அரசும், அமைச்சர்களும் கமிஷன், கலெக்சன் மட்டுமே பார்க்கிறார்கள், மக்களை பார்ப்பதில்லை, மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு சரியான பதிலடியை கொடுப்பார்கள். வரி மேல் வரி போட்டும் மக்களுக்கு எதையும் மதுரை மாநகராட்சி செய்யவில்லை, அமைச்சர் மூர்த்தி, அவர் தொகுதியில் மட்டும்தான் ஆய்வு செய்கிறார்.
திமுக அரசும், தமிழக ஆளுநரும் காதலர்கள் போல தற்போது இணக்கமாக உள்ளனர். புது காதலன், புது காதலி போல தமிழக அரசும், ஆளுநரும் உள்ளனர். ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள மாட்டோம் என ஆளுநருக்கு எதிராக செயல்பட்டவர்கள் பின்பு முதல்வரும், மூத்த அமைச்சர்களும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டார்கள். முதல்வர் திடீரென டெல்லிக்கு செல்கிறார், பிரதமரை சந்திக்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 7,500 கோடி ஒதுக்குகிறார்கள். ஏதோ தேன்நிலவு போல நடக்கிறது. ஆளுநர் எப்போதும் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி மக்களின் குறைகளை எடுத்து சொல்வார். ஆனால், தற்போது மாறி இருக்கிறார் என்றார்.