"விளம்பரத்தை தேடுவதிலேயே அதிமுக-வினர் முன்னிப்பாக உள்ளனர்" : இபிஎஸ்-வை விளாசிய ஸ்டாலின்!
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை பேரவையில் விவாதிக்க வலியுறுத்தி அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நேற்று ஒருநாள் மட்டும் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்றும் சபாநாயகரின் இருக்கை சுற்றி நின்று மீண்டும் பேரவையில் அமளி செய்ததால் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிக் கட்சியினர் குறிப்பாக அதிமுக எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க இந்த அரசு தயாராக உள்ளது என்று சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன். தாங்களும் அதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
மக்கள் பிரச்னையைப் பற்றி இப்பேரவையில் பேச வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தும், அதை ஏற்க மனமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் பேரவையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல. பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அதிமுக மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது. இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. அவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு இதுதான்” இவ்வாறு தெரிவித்தார்.
Read more ; கென்யாவில் வெடித்த கலவரம் ; இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் அறிவுறுத்தல்!!