சென்னையில் தொழில் வரி 35% உயர்வு..!! இனி எவ்வளவு செலுத்த வேண்டும்..? மாநகராட்சியின் அறிவிப்பால் அதிருப்தியில் மக்கள்..!!
சென்னையில் தொழில் வரி 35% உயர்த்தப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை தொழில் வரி செலுத்த வேண்டும். இந்நிலையில், 6 மாதத்துக்குள் ரூ.21,000 வருமானம் ஈட்டுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரூ.21,000இல் இருந்து ரூ.30,000 வருமானம் பெறுபவர்கள் தொழில் வரி ரூ.135இல் இருந்து ரூ.180ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், ரூ.30,001 முதல் ரூ.45,000 வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.315இல் இருந்து ரூ.425ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.45,001 முதல் ரூ.60,000 வரை வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.690இல் இருந்து ரூ.930 தொழில் வரி செலுத்த வேண்டும். ரூ.60,001 முதல் ரூ.75,000 வரை வருமானம் உள்ளவர்கள், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் பழைய வரியை கட்டினாலே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி 35 சதவீத தொழில் வரி உயர்வை அறிவித்துள்ளதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சொத்து வரி, குடிநீர் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இனி ஆண்டுதோறும் 6% வரி உயர்வு அமல்படுத்தப்படும் என்றும், இவற்றோடு குப்பை வரி, கட்டட வரைபட கட்டணங்கள் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த தொழில்வரி உயர்வால் சுமார் 75% மக்கள் பாதிப்புக்குள்ளாகக் கூடிய நிலை உருவாகியுள்ளது. மக்களின் சுமையை குறைக்கும் வகையில் உயர்த்தப்பட்ட தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரி உயர்வுகளையும் திரும்பப்பெற வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.