லிப்ஸ்டிக் போடாதீங்க.. சொல்லியும் கேக்கல..!! மேயர் பிரியாவின் தபேதார் பணி இடமாற்றம்..!! என்ன விவகாரம்?
லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு பணிக்கு வந்ததால் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் பெண் தபேதார் பணியிடை மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் தபேதாராக இருந்தவர் மாதவி (50). ஒற்றைப் பெற்றோரான 50 வயது மாதவி, சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் ஆவர். அரசு சம்பந்தமாகச் செல்லும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது மேயர் ப்ரியாவுடன் இவரும் உடன் இருப்பார். தபேதார் சீருடையில் இருக்கும் மாதவி, லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் முன்பு, தபேதார் மாதவி இவ்வாறு இருப்பதை சென்னை மாநகராட்சி அலுவலகம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மேயரின் தனி உதவியாளர் சிவசங்கர், மாதவியை அழைத்து லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு வரக் கூடாது என்று கண்டித்துள்ளார். ஆனால் அதற்கு மாதவி செவிசாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
பின்னர், மாதவிக்கு மெமோ அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த மாதவி, 'லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தக் கூடாது என்று அரசு உத்தரவு ஏதேனும் உள்ளதா? அதுபோன்ற உத்தரவுகள் இருந்தால் காட்டுங்கள்' என்று கூறி உள்ளார். அதையே தமது விளக்கமாகவும் மேயரின் உதவியாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். எனினும் மாதவியின் விளக்கத்தை ஏற்க மறுத்து, அவரை உடனடியாக மணலிக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அந்த பெண் குற்றம் சாட்டினார்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை மேயர் அலுவலகம் மறுத்துள்ளது. மாதவி, லிப்ஸ்டிக் விவ்காரத்தால் இடமாற்றம் செய்யப்படவில்லை. பணியைச் சரியாகச் செய்யாத காரணத்தாலேயே மெமோ கொடுக்கப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.