மேடையில் அமித் ஷா பேசியது என்ன...? எக்ஸ் தளத்தில் தமிழிசை விளக்கம்..!
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் அமித் ஷா கண்டிப்புடன் பேசுவதை போன்ற வீடியோ விமர்சனமான நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்துகொண்டார். விழா மேடைக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது அமித் ஷா, தமிழிசையை அழைத்து கண்டிப்புடன் பேசியது போன்ற வீடியோ வெளியானது. பாஜகவின் உள்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதற்காக, தமிழிசையை அமித் ஷா கண்டித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், 2024 தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோது, தேர்தலுக்குப் பிந்தைய நிலைமை குறித்து அறிந்து கொள்வதற்காக தன்னை அழைத்தார். மிகுந்த அக்கறையுடன் அரசியல் பணிகளையும் தொகுதிப் பணிகளையும் தீவிரமாக மேற்கொள்ளுமாறும் என்னை அறிவுறுத்தினார். இந்தப் பதிவு, சமூக ஊடகங்களில் பரவிவரும் தேவையற்ற யூகங்களுக்கு பதில் என பதிவிட்டுள்ளார்.