வந்தாச்சு ஜிபிஎஸ்… இனி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை… மத்திய அரசின் சூப்பரான திட்டம்.!
இந்தியாவில் நெடுஞ்சாலை போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக நான்கு வழி சாலைகள் அமைக்கப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பிற்காக டோல்கேட் அமைக்கப்பட்டு ஃபாஸ்டாக் முறையில் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூர் மற்றும் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஃபாஸ் டாக்கிற்கு பதிலாக சேட்டிலைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டணம் வசூல் செய்யும் முறை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படுவதை தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் டோல்கேட்கள் படிப்படியாக அகற்றப்படும் எனவும் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாகனங்கள் பயணிக்கும் சாலைகள் மற்றும் அவை கடந்துள்ள டோல்கேட்டுகளின் அடிப்படையில் வாகனத்திற்கான கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 3ஜி இணைய சேவை மற்றும் ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய மைக்ரோ கண்ட்ரோலர் உபகரணங்கள் இவற்றிற்கு பயன்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
வாகனங்கள் பயணம் செய்யும் தூரம் மற்றும் அவை சென்று வந்த இடங்களை ஜிபிஎஸ் மூலம் கணக்கிட்டு அதனடிப்படையில் கட்டணம் மொத்தமாக வசூலிக்கப்படும் என தெரிகிறது. போலியான டோல்கேட் வசூல் மற்றும் கட்டணங்களில் நடத்தப்படும் மோசடி ஆகியவற்றை தவிர்ப்பதற்காகவும் பயணிகளின் நேரத்தை சேமிப்பதற்கும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதிலும் gps மூலம் கட்டணம் வசூல் செய்யப்படும் முறை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். வருகின்ற மார்ச் மாதம் முதல் செயற்கைக்கோள் அடிப்படையில் கட்டணம் வசூல் செய்யும் முறையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமல்படுத்தும் எனவும் தெரிவித்திருக்கிறார். தற்போது நடைமுறையில் இருக்கும் ஃபாஸ்டாக் கட்டண முறைக்கு பதிலாக ஜிபிஎஸ் கட்டண முறை நடைமுறைக்கு வரும் என தெரிவித்திருக்கிறார்.
இதன் சோதனை ஓட்டமாக மைசூர் மற்றும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் இல்லாத ஜிபிஎஸ் கட்டண முறை செயல்படுத்தப்பட இருக்கிறது. இதன் தரவுகளை அடிப்படையாக வைத்து நாடு முழுவதும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் வாகன ஓட்டிகள் டோல்கேட்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இது நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.