"தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசு"... "வெள்ள பாதிப்பிற்கு 1 ரூபாய் கூட தரவில்லை" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு.!
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதி பங்கீடு தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. தமிழக மற்றும் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் செலுத்தும் வரிப்பணத்தை மத்திய அரசு வட மாநிலங்களுக்கு செலவிடுவதாக தென் மாநில அரசுகள் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பாக கேரள அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தது.
மாநில அரசிற்கு மத்திய அரசு முறையாக நிதி பங்கீடு செய்யாதது குறித்து தமிழக முதலமைச்சரும் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் இது தொடர்பாக ஆளுநர் வாசிக்க மறுத்த உரையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு 1 ரூபாய் கூட நிவாரணமாக வழங்கவில்லை என தமிழகத்தின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு வரியாக 6 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசிற்கு அளித்திருக்கிறது. ஆனால் மத்திய அரசு இதுவரை தமிழகத்திற்கு கடந்த 5 வருடங்களில் 1.5 லட்சம் கோடி ரூபாயை மட்டுமே திருப்பி அடித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு 1 ரூபாய் கூட நிவாரண நிதியாக வழங்கப்படவில்லை என தெரிவித்திருக்கிறார். மத்திய அரசு மக்கள் பணத்தை மக்களுக்கே திருப்பித் தர மறுக்கிறது எனவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இவற்றிற்கெல்லாம் மக்கள் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மத்திய அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என கூறினார். முன்னதாக மாநிலங்களுக்கு நிதி பங்கீடு செய்வது குறித்த விவகாரத்தில் தமிழக அரசு கொடுக்கும் 1 ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே மத்திய அரசு திருப்பித் தருவதாக தமிழக எம்பி வில்சன் தகுந்த ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary: Minister Udhayanidhi Stalin accuses that central govt didn't even pay a single rupee for Tamil Nadu floods.