அண்ணாமலை கடிதம் எதிரொலி... சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்...!
சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 2020-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். மத்திய அரசின் நிதி ஒப்புதலை உறுதிப்படுத்தும் முன்பாகவே தமிழக அரசு இத்திட்டத்தை மாநில அரசு திட்டமாகத் தொடங்க முடிவு செய்தது. ரூ.63,246 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம், நிதிப் பற்றாக்குறையால், முடங்கி போய் கிடக்கிறது.
இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழகத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசு மறுக்கிறது என்று திமுக தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடிக்கு கடந்த வாரம் கடிதம் எழுதினார். மேலும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வேலைகள் நடந்துள்ளது. இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு நிதி அளித்தால் மட்டுமே இதை நிறைவேற்ற முடியும் என்பது இப்போது தெளிவாகிறது.
இதனை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகளுக்கு 50% பங்குத்தொகையை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கடந்த வாரம் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து இருந்தார். இந்த நிலையில் சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.